கன்வார் யாத்திரை... உணவகங்களுக்கு அப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தது ஏன்? உ.பி. அரசு விளக்கம்

கன்வார் யாத்திரை பக்தர்கள்
உத்தர பிரதேச மற்றும் உத்தரகாண்ட் அரசின் உத்தரவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் கன்வார் யாத்திரை வழிப்பாதையில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் தங்களின் பெயர்களை குறிப்பிட்டு பெயர்ப்பலகை வைக்கவேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க. அரசு உத்தரவிட்டது. இதேபோல் உத்தரகாண்ட் அரசும் உத்தரவிட்டிருந்தது. இது இஸ்லாமிய கடை உரிமையாளர்களை பாதிக்கும் விதமாக உள்ளது என்று சர்ச்சை எழுந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கில் உத்தர பிரதேச அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், அமைதியான மற்றும் ஒழுங்கான யாத்திரையை உறுதிசெய்யவே உணவகங்களின் உரிமையாளர்களின் பெயர்களை தெரிவிக்கும்படி உத்தரவிட்டதாக கூறியிருந்தது.
மேலும், கடைகள் மற்றும் உணவகங்களின் பெயர்களால் ஏற்படும் குழப்பம் குறித்து கன்வாரி பக்தர்கள் அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அரசு தனது பதில் மனுவில் கூறியிருந்தது.
இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் அரசின் உத்தரவுகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீட்டிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். விசாரணையையும் 5-ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள... https://x.com/dinathanthi