பேஸ்புக் 'ரெக்வெஸ்ட்' ஏற்காததால் ஆத்திரம் - 16 வயது சிறுமி குத்திக்கொலை, தாய் படுகாயம்; இளைஞன் வெறிச்செயல்


பேஸ்புக் ரெக்வெஸ்ட் ஏற்காததால் ஆத்திரம் - 16 வயது சிறுமி குத்திக்கொலை, தாய் படுகாயம்; இளைஞன் வெறிச்செயல்
x

பேஸ்புக்கில் நட்பு வட்டத்தில் சேர்வதற்காக அனுப்பப்பட்ட கோரிக்கையை ஏற்காததால் 16 வயது சிறுமியை இளைஞன் குத்திக்கொலை செய்துள்ளான்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் நக்லா போஹ்ரா கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரவி. இவர் அதே பகுதியில் வசித்துவரும் 16 வயது சிறுமிக்கு பேஸ்புக் சமூகவலைதளம் மூலம் நட்பு வட்டத்தில் சேர்வதற்கான 'ரெக்வெஸ்ட்' அனுப்புயுள்ளார். ஆனால், ரவி அனுப்பிய நட்பு வட்ட கோரிக்கையான 'ரெக்வெஸ்டை' அந்த சிறுமி ஏற்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த ரவி நேற்று அந்த சிறுமியில் வீட்டிற்கு வந்துள்ளார். திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக வந்துள்ளதாக ரவி அந்த சிறுமியிடம் கூறியுள்ளார். இதை நம்பிய அந்த சிறுமி தனது வீட்டிற்கு வந்துள்ள ரவியிடமிருந்து திருமண அழைப்பிதழை வாங்குவதற்காக அருகே சென்றுள்ளார்.

அப்போது, தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் அந்த 16 வயது சிறுமியை ரவி சரமாரியாக குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலால் அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் சுமிதா கத்திக்குத்து தாக்குதலை தடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், சுமித்தாவையும் ரவி கத்தியால் குத்தியுள்ளார். பின்னர், தன்னைத்தானே கத்தியால் குத்திய ரவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சிறுமி மற்றும் அவரது தாய் சுமித்தாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமி அவரது தாயார் சுமித்தா மற்றும் தாக்குதலை நடத்திய ரவி அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவெ உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். மேலும், தாக்குதலுக்கு உள்ளான சுமித்தாவும், தாக்குதல் நடத்திய ரவியும் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகள் பேஸ்புக் ரெக்வெஸ்டை ஏற்காததாலேயே ரவி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக உயிரிழந்த 16 வயது சிறுமியின் தந்தை தேஜ்வீர் சிங் போலீசில் புகார் அளித்துள்ளார்.


Next Story