உத்தரகாண்ட்: சொகுசு விடுதியில் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோரை சந்தித்து முதல்-மந்திரி ஆறுதல்
உத்தரகாண்ட் சொகுசு விடுதியில் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோரை அம்மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகனுக்கு சொந்தமான சொகுசு விடுதியில் அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண் வரவேற்பாளர் ஆக பணியாற்றி வந்தார்.கடந்த 18-ம் தேதி சொகுசு விடுதிக்கு சென்ற அங்கிதா பண்டாரி வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம்பெண் அங்கிதாவை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில்,விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் அங்கிதா பண்டாரி சடலமாக மீட்கப்பட்டார். சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யாவிடம் நடத்திய விசாரணையில் அங்கிதாவை விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில், ரிசார்ட்டின் உரிமையாளர் புல்கித் ஆர்யா, அதன் மேலாளர், உதவி மேலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அந்த பெண் கொல்லப்பட்ட அன்றிரவு, தன்னுடைய ஆண் நண்பனை போன் மூலம் அழைத்து, "தான் பெரும் சிக்கலில் இருப்பதாக" கூறியுள்ளார். மேலும் "நான் பணிபுரிந்து வரும் ரிசார்ட்டின் உரிமையாளரும் மேலாளர்களும் இங்கு வரும் விருந்தினர்களுடன் உடலுறவு கொள்ளுமாறு என் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கின்றனர்" என்று அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அங்கிதா கொலையை கண்டித்து உத்தரகாண்ட் முதல் டெல்லி வரை போராட்டங்கள் நடைபெற்று வந்தது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட புல்கிட் ஆர்யாவின் தந்தையான வினோத் ஆர்யாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, அங்கிதா பண்டாரியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், குற்றவாளிகளுக்கு மிக கடுமையான தண்டனை கிடைக்கும் எனவும், குற்றவாளிகள் விரைவு நீதிமன்றத்தின் மூலம் விசாரிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.