பாலம் இடிந்ததால் சிக்கித்தவித்த பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
பாலம் இடிந்ததால் சிக்கித்தவித்த பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
ருத்ரபிரயாக்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே மத்மகேஷ்வரர் கோவில் செல்லும் வழியில் பந்தோலி என்ற கிராமத்தில் ஒரு பாலம் உடைந்ததால், 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழியில் சிக்கித்தவித்தனர்.
இதையடுத்து மீட்பு படையினர் பக்தர்களை மீட்கும் பணியில் இறங்கினர். நேற்று முன்தினம் 52 பயணிகள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர். மீதமுள்ள பக்தர்களை மீட்பதற்காக நேற்று ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது. காலையில் 70-க்கும் மேற்பட்ட பயணிகளை ஹெலிகாப்டர் மீட்டது. மேலும் 80 பக்தர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடந்தது.
பக்தர்களுக்காக மத்மகேஷ்வரர் கோவிலில் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ குழு தயார் நிலையில் வைக்கப்பட்டது. மீட்பு பணிகளில் மழை குறுக்கிடாமல் இருந்தால் விரைவில் அனைவரும் மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பக்தர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் ரான்சி கிராமத்தில் இறக்கிவிடப்பட்டு அங்கிருந்து தங்கள் செல்லும் பகுதிகளுக்கு புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.