19.2 மீட்டர் செங்குத்து துளையிடல் முடிந்தது: சுரங்கப்பாதை மீட்புப் பணிகள் குறித்து நிர்வாக இயக்குநர் தகவல்


19.2 மீட்டர் செங்குத்து துளையிடல் முடிந்தது:  சுரங்கப்பாதை மீட்புப் பணிகள் குறித்து நிர்வாக இயக்குநர் தகவல்
x

சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உத்தர்காசி,

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப்படும் சுரங்க பாதையில் கடந்த 12-ந் தேதி மண்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத்துக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் உள்பட பலதரப்பட்ட மீட்பு குழுக்கள் களத்தில் இறங்கின. தொழிலாளர்களை பத்திரமாக மீட்க பல திட்டங்கள் ஆராயப்பட்ட நிலையில் இடிபாடுகளில் கிடைமட்டாக துளையிட்டு அதனுள் குழாயை செலுத்தி தொழிலாளர்களை மீட்க முடிவு எடுக்கப்பட்டது.

இதற்காக ராட்சத எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இடிபாடுகளின் பக்கவாட்டில் துளையிடப்பட்டன. கடினமான பாறைகளை துளையிட முடியாமல் பல்வேறு எந்திரங்கள் பழுதாகின. தொடர்ந்து, அமெரிக்க தயாரிப்பு 'ஆகர்' எந்திரம் கொண்டு துளையிடும் பணிகள் தொடங்கின. இதில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இடிபாடுகளுக்குள் இருந்து எதிர்படும் இடையூறுகளால் துளையிடும் பணி இடை இடையே நிறுத்தப்பட்டாலும் மீட்பு குழுவினர் முழு நம்பிக்கையுடன் மீட்பு பணிகளை தொடர்ந்தனர். இதன் மூலம் 57 மீட்டர் நீளமுள்ள இடிபாடு பகுதியில் கிட்டத்தட்ட 47 மீட்டர் தூரத்துக்கு துளையிடப்பட்டு அதனுள் இரும்பு குழாய் செலுத்தப்பட்டது. இதனால் மீட்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாகவும், விரைவிலையே தொழிலாளர்கள் மீட்கப்பட்டுவிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில்தான் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடிபாடுகளில் துளையிடும் 'ஆகர்' எந்திரத்தின் பிளேடுகள் உடைந்து இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டன. இது மீட்பு பணியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

'ஆகர்' எந்திரம் பழுதடைந்துவிட்டதால் இனி அதை கொண்டு துளையிடுவது சாத்தியமில்லை என்பதால் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு மீட்பு குழுக்கள் தள்ளப்பட்டுள்ளன. அதன்படி இடிபாடுகளில் சிக்கியிருக்கும் 'ஆகர்' எந்திரத்தின் பிளேடுகளை வெட்டி எடுத்த பிறகு, எஞ்சியுள்ள 10-12 மீட்டர் தூரத்திலான இடிபாடுகளை ஆட்கள் மூலம் துளையிட ஆலோசிக்கப்பட்டது.

ஆகர் எந்திரத்தின் பிளேடுகளை வெட்டி எடுக்க 'பிளாஸ்மா கட்டர்' என்கிற நவீன எந்திரம் ஐதராபாத்தில் இருந்து நேற்று வரவழைக்கப்பட்டது. அந்த எந்திரத்தை பயன்படுத்தி இடிபாடுகளில் இருந்து 'ஆகர்' எந்திரத்தின் பிளேடுகளை முழுமையாக வெளியே எடுக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில் மாற்று முயற்சியாக சுரங்க பாதையின் மேற்பகுதியில் இருந்து அடிப்பாகம் வரை செங்குத்தாக துளையிடும் பணியில் மீட்பு குழுக்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.

இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கியிருந்தாலும், அது 2-வது தேர்வாக கருதப்பட்டதால் பணிகள் மிதமான வேகத்தில் நடந்து வருகின்றன. தற்போது அந்த பணிகள் வேகமெடுத்துள்ளன.

இதனிடையே மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக அங்கு ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் பொறியாளர் குழுவான மெட்ராஸ் சாப்பர்சின் ஒரு பிரிவு, நேற்று அங்கு சென்றடைந்தது.

இந்நிலையில் உத்தர்காசியின் சுரங்கப்பாதையில் மொத்தம் 19.2 மீட்டர் செங்குத்து துளையிடும் பணி நிறைவடைந்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (NHIDCL) நிர்வாக இயக்குநர் மஹ்மூத் அகமது தெரிவித்தார்.

உத்தரகாசியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "நாங்கள் சுமார் 19.2 மீட்டர் தோண்டும் பணியை முடித்துள்ளோம். நவம்பர் 30 ஆம் தேதிக்குள், அதாவது நான்கு நாட்களுக்குள் 86 மீட்டர் துளையிட வேண்டும். மேலும் தடைகள் இருக்காது என்று நம்புகிறேன். குறித்த நேரத்தில் பணிகள் முடிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.


Next Story