கர்நாடகாவில் வெற்றி; தென் இந்தியாவில் பா.ஜ.க. முக்தி நடக்கிறது: சத்தீஷ்கார் முதல்-மந்திரி பரபரப்பு பேட்டி


கர்நாடகாவில் வெற்றி; தென் இந்தியாவில் பா.ஜ.க. முக்தி நடக்கிறது: சத்தீஷ்கார் முதல்-மந்திரி பரபரப்பு பேட்டி
x

முதலில் இமாசல பிரதேசத்தில், தற்போது கர்நாடகாவில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று சத்தீஷ்கார் முதல்-மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.

ராய்ப்பூர்,

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ந்தேதி நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சி 129 இடங்களிலும், பா.ஜ.க. 68 இடங்களிலும் மற்றும் ம.ஜ.த. 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இதன் மூலம் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை முதல் மந்திரி வேட்பாளரை அறிவிக்காத நிலையில், கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே முதல் மந்திரி பதவிக்கான போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் வெற்றி குறித்து சத்தீஷ்காரின் முதல்-மந்திரி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவரான பூபேஷ் பாகல் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, முதலில் இமாசல பிரதேசத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம். தற்போது கர்நாடகாவில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

அவர்கள், நாட்டில் காங்கிரஸ் முக்தி நடக்கிறது என்று கூறி வந்தனர். ஆனால், தற்போது பா.ஜ.க. முக்தி நடக்கிறது என்று பேட்டியளித்து உள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் ஹில்டன் ஓட்டலில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், கட்சி தலைவர் கார்கே, தேர்தலில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன், முதல்-மந்திரி வேட்பாளர் பற்றிய அவர்களின் கருத்துகளை கேட்டு பெறுவார். காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை விட கூடுதலான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதனால், கர்நாடகாவில் அரசமைக்கும் அனைத்து வேலைகளிலும் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது.


Next Story