லஷ்கர் பயங்கரவாதிகளை துணிச்சலாக பிடித்த கிராமவாசிகள்; காஷ்மீர் டி.ஜி.பி. நேரில் பாராட்டு
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை துணிச்சலாக செயல்பட்டு பிடித்த கிராமவாசிகளை நேரில் சந்தித்து டி.ஜி.பி. தில்பாக் சிங் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் டக்சன் தோக் கிராமத்தில், போலீசாரால் தேடப்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் பயங்கரவாதிகள் தலிப் உசைன் ஷா மற்றும் அவரது கூட்டாளி பைசல் அகமது தர் ஆகியோர் தஞ்சமடைந்து இருந்தனர்.
அவர்களை கிராமவாசிகள் அனைவரும் சேர்ந்து நேற்று காலை சிறை பிடித்தனர். அவர்களிடம் இருந்த 2 ஏ.கே. ரக துப்பாக்கிகள், பல்வேறு எறிகுண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
இதன்பின்னர் அவர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். இதில், துணிச்சலாக செயல்பட்டதற்காக கிராமவாசிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கிராமவாசிகளின் தைரியத்திற்காக நான் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன் என்றும் சின்ஹா தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங், ஜம்மு ஏ.டி.ஜி.பி. முகேஷ் சிங் ஆகியோர் சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் சென்றனர். அவர்கள் நிலைமையை ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின்னர் துணிச்சலுடன் செயல்பட்ட கிராமவாசிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டனர்.