திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றப்பட்டது: தேவஸ்தானம் தகவல்


திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றப்பட்டது: தேவஸ்தானம் தகவல்
x

பொதுப் பக்தர்கள் விரைந்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைப்பதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி,

திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தலைமை தாங்கி பக்தர்கள் தெரிவித்த மொத்தம் 33 அழைப்புகளுக்கு பதில் அளித்துப் பேசினார். முன்னதாக அவர் கூறியதாவது:-

ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வந்து வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருக்கும் பொதுப் பக்தர்களுக்கு விரைந்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைப்பதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது வி.ஐ.பி. பக்தர்கள் காலை 8 மணிக்கு கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த மாற்றத்தால் பொதுப் பக்தர்களுக்கு 3 மணிநேரம் தரிசன நேரம் கிடைத்துள்ளது. அந்த நேரத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். பக்தர்கள் திருமலைக்கு ஒரு நாள் முன்னதாக வர வேண்டிய அவசியமில்லை. ஆனால் இப்போது திருப்பதியில் தங்கி, பிரேக் தரிசன டிக்கெட்டை பெற்று, காலை நேரடியாக திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம். புதிய முயற்சியால் பக்தர்கள் ஒரு நாள் திருமலையில் தங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமலையில் தங்குவதற்கான விடுதி அறைக்கான பயன்பாடும் குறைத்தது.

வி.ஐ.பி. பிரேக் தரிசன மாற்றம் சோதனை முயற்சியாக ஒரு மாதத்துக்கு செயல்படுத்தப்படும். ஜனவரி மாதம் 2-ந்தேதியில் இருந்து ஜனவரி மாதம் 11-ந்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளை போலவே, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தினமும் 25 ஆயிரம் ரூ.300 டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது மற்றும் 10 நாட்களுக்கு மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகளை வெளியிடுகிறது. எந்தப் பகுதியில் இருந்தும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோல் 10 நாட்களுக்கு தேதி நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டிக்கெட்டுகளும் வழங்கப்படும். அந்த டிக்கெட் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் வீதம் மொத்தம் 5 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்களில் ஒதுக்கப்படும். பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் தேதியின்படி வைகுண்ட துவார தரிசனத்துக்கு வரலாம்.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நாளொன்றுக்கு 75 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் பக்தர்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்தை வழங்க ஏற்பாடு செய்ய ஆலோசனை நடத்தி வருகிறோம். அனைத்துப் பக்தர்களின் வசதிக்காக ரூ.300 டிக்கெட் அல்லது தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்காக திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் திருமலையை அடையலாம். ஆனால் கோவிலுக்குள் சாமி தரிசனம் வழங்கப்பட மாட்டாது.

வருகிற 16-ந்தேதி மாலை 6.12 மணிக்கு மார்கழி (தனுர் மாதம்) மாதம் பிறக்கிறது. மார்கழி மாத பிறப்பால் ஏழுமலையான் கோவிலில் வருகிற 17-ந்தேதியில் இருந்து 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை அதிகாலையில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பவை சேவை நடக்கிறது. ஆனந்த நிலையத்தின் மேற்கூரையில் தங்க முலாம் பூசும் பணி தொடங்கப்பட உள்ளது. தங்க முலாம் பூசும் பணியை 6 மாதம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்காக, பிப்ரவரி மாதம் 23-ந்தேதி பாலாலய நிகழ்ச்சி நடத்தப்படும். இந்தத் திட்டத்துக்காக பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தங்கத்தை தேவஸ்தானம் பயன்படுத்தி கொள்ளும். இந்தக் காலக்கட்டத்தில் ஸ்ரீவாரி தரிசனம் 1957-58ம் ஆண்டு பின்பற்றப்பட்ட நடைமுறையின்படி தொடரும்.

திருப்பதியில் உள்ள மாதவம் தங்கும் விடுதியில் ஸ்ரீவாணி காணிக்கையாளர்களுக்கு நேரில் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ஸ்ரீவாணி அறக்கட்டளை காணிக்கையாளர்கள் தற்போது கடந்த 1-ந்தேதியில் இருந்து மாதவம் தங்கும் விடுதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளை நேரில் கவுண்ட்டரில் பெறுகிறார்கள். அதே விடுதியில் அவர்களுக்கு அறைகளும் கிடைக்கும். கீதா ஜெயந்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் டிசம்பர் 4-ந்தேதி (அதாவது இன்று) நாத நீராஞ்சனம் மேடையில் பகவத்கீதா அகண்ட பாராயணத்தை ஏற்பாடு செய்கிறது. நிகழ்ச்சி காலை 7 மணியில் இருந்து வேத பண்டிதர்கள் 18 சர்கங்களில் இருந்து 700 ஸ்லோகங்களை இடைவிடாமல் பாராயணம் செய்வார்கள். இந்த நிகழ்ச்சி பக்தி சேனலில் ஒளி பரப்பப்படும்.

நாளை (அதாவது திங்கட்கிழமை) சக்கர தீர்த்த முக்கொடி உற்சவம் நடக்கிறது. 7-ந்தேதி திருமலையில் கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது. உலக மக்கள் மனித நேயத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக திருமலையில் உள்ள தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் சீனிவாச விஸ்வ சாந்தி ஹோமம் வருகிற 12-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நடக்கிறது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அச்சிட்ட 2023-ம் ஆண்டுக்கான டைரிகள் மற்றும் காலண்டர்கள் மும்பை, பெங்களூரு, சென்னை, புது டெல்லி, ஐதராபாத், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களிலும், திருமலை மற்றும் திருப்பதியில் கிடைக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் இணை அதிகாரிகள் வீரபிரம்மன், சதாபார்கவி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story