பழங்குடி இனத்தவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை - கேரள முதல்-மந்திரிக்கு ராகுல் காந்தி கடிதம்


பழங்குடி இனத்தவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை - கேரள முதல்-மந்திரிக்கு ராகுல் காந்தி கடிதம்
x

கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பழங்குடி இனத்தவரின் மர்ம மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேரள முதல்-மந்திரிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 46) என்ற பழங்குடி இனத்தவர், கடந்த 11-ந்தேதி கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி அருகே மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது மனைவி அந்த மருத்துவமனையில் பிரசவம் முடித்து சிகிச்சையில் இருந்த நிலையில், இந்த சோகம் நிகழ்ந்தது.

விஸ்வநாதன் சாவு குறித்து விசாரணை நடத்திய போலீசார், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். ஆனால் இதை ஏற்க மறுத்துள்ள குடும்பத்தினர், அவரது சாவில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விஸ்வநாதன் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடுமாறு முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை மற்றும் மறு பிரேத பரிசோதனையை விஸ்வநாதனின் குடும்பத்தினர் கேட்பதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, அவசர அவசரமாக பிரேத பரிசோதனை நடத்தியது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறியதாகவும் தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில் வயநாடு தொகுதிக்கு சென்றிருந்த ராகுல் காந்தி, விஸ்வநாதனின் வீட்டுக்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story