பிரதமர் மோடி 27-ந்தேதி ஜப்பான் பயணம்: ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பு
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 27-ந்தேதி அங்கு செல்கிறார்.
புதுடெல்லி,
ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் ஷின்ஜோ அபே (வயது 67). அங்கு நரா என்ற இடத்தில் கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது அந்த நாட்டை உலுக்கியது.
ஷின்ஜோ அபேயின் இறுதிச்சடங்கு 12-ந்தேதி டோக்கியோவில் நடந்தது. அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சி, அந்த நாட்டின் அரசு சார்பில் 27-ந்தேதி டோக்கியோவில் நடத்தப்படுகிறது.
இதுபற்றி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், "அரசு சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துகிறபோது, அது ஜப்பான் என்றைக்கும் வன்முறைக்கு அடிபணியாது என்பதை காட்டும். சர்வதேச தலைவர்கள் இரங்கல் தெரிவிக்கவும் வகை செய்யும்" என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேரில் கலந்துகொள்கிறார். இதை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஷின்ஜோ அபேயின் மறைவுக்கு பிரதமர் மோடி விடுத்த இரங்கல் செய்தியில், தனது அன்பு நண்பர் என்று அவரை குறிப்பிட்டதுடன் அவருடனான நினைவலைகளை பகிர்ந்து கொண்டது நினைவுகூரத்தக்கது.
பிரதமர் மோடி தனது ஜப்பான் பயணத்தின்போது, அந்த நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேசுகிறார்.