காங்கிரசுக்கு வாக்களிப்பது மாநில வளர்ச்சி பயணத்திற்கு பிரேக் போட்டது போலாகி விடும்: பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சியின் பி அணியாக ஜனதா தளம் (எஸ்) உள்ளது என்றும் கர்நாடகாவை சுரண்ட, காங்கிரசுடன் கைகோர்க்க அக்கட்சி விரும்புகிறது என்றும் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பேலூரு,
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக பணியாற்றி வருகின்றன.
கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பேரணி, கட்சி பொது கூட்டம் போன்றவற்றிலும் கலந்து கொண்டு வருகின்றன. கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் நட்சத்திர பிரசாரகர்களும் கலந்து கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகாவின் ராமநகரா மாவட்டத்தில் சென்னப்பட்டனா என்ற நகரில் நடந்த பா.ஜ.க. கட்சி பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி இன்று பேசினார்.
இதனை தொடர்ந்து, கர்நாடகாவின் பேலூரு நகரில் நடந்த கட்சி பொது கூட்டத்திலும் கலந்து கொண்டு அவர் பேசினார். அவர் பேசும்போது, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் நிலையற்ற தன்மைக்கான அடையாளங்கள்.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதன் தலைவர்களுக்கு இடையிலேயே சண்டை நடப்பதில் அவர்கள் பிரபலம் வாய்ந்தவர்கள். இதற்கு சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களே எடுத்துக்காட்டு. காங்கிரஸ் கட்சியின் பி அணியாக ஜனதா தளம் (எஸ்) கட்சி உள்ளது. கர்நாடகாவை சுரண்டுவதற்காக, காங்கிரசுடன் கைகோர்க்க அக்கட்சி விரும்புகிறது. நாடாளுமன்றத்தில் கூட, ஒவ்வொரு விசயத்திலும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் ஒன்றாகவே இருக்கின்றன.
அதனால், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், காங்கிரஸ் கணக்கிலேயே போய் சேரும். காங்கிரசுக்கு வாக்களிப்பது மாநில வளர்ச்சி பயணத்திற்கு பிரேக் போட்டது போலாகி விடும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கர்நாடகாவின் காங்கிரஸ் பிரிவு, டெல்லியில் ஒரு கட்சி ஆட்சியில் அமர்வதற்காக 24 மணிநேரமும் பணியாற்றி வருகிறது. ஒவ்வொரு முடிவுக்கும், அந்த குடும்பத்திடம் இருந்து ஒப்புதலுக்கான சமிக்ஞையை பெற வேண்டிய அவசியம் உள்ளது.
ஜனதா தளம் (எஸ்) கட்சியானது ஒரு குடும்பத்திற்கான ஒரு தனியார் நிறுவன கட்சியாக உள்ளது. அவர்களது குடும்பத்தின் நலனுக்காக அவர்களது ஆற்றலை செலவழித்து கொண்டிருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.