இந்தியாவின் அமைதி, ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விடும் சக்திகளிடம் எச்சரிக்கை தேவை; வெங்கையா நாயுடு பேச்சு
எந்தவொரு கலாசாரம், மதம் அல்லது மொழியை சிறுமைப்படுத்துவது இந்திய கலாசாரம் கிடையாது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
விஜயவாடா,
ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடா நகரில் நடந்த சுதந்திர போராட்ட வீரர் மற்றும் பத்திரிகையாளரான தமராஜூவின் வாழ்க்கை பயணம் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு அதனை வெளியிட்டார்.
இதன்பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, சுதந்திர போராட்டத்தின்போது நமது தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் மேற்கொண்ட தியாகங்களை நினைவுகூர, ஆசாதி கா அம்ரித் மகோத்சவம் ஒரு சந்தர்ப்பம் வழங்குகிறது என கூறினார்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் முயற்சிகளை சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தொடர் கட்டுரைகள் வழியே வெளியிட்டு, நமது தலைவர்களின் வாழ்க்கை பாடங்களை பற்றி இளைய தலைமுறையினருக்கு தெரியும்படி செய்யுங்கள் என அவர் ஊடக நிறுவனங்களை கேட்டு கொண்டார்.
வறுமை, கல்வியறிவின்மை, சமூக வேற்றுமை மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஆகியவை இல்லாத இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் போராட வேண்டும். நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் வகையில் இதனை மேற்கொள்ளும்படி அவர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்தவொரு கலாசாரம், மதம் அல்லது மொழியை சிறுமைப்படுத்துவது இந்திய கலாசாரம் கிடையாது என வலியுறுத்திய அவர், இதுபோன்று, இந்தியாவை பலவீனமடைய செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிக்கும் பொறுப்பினை ஒவ்வொரு குடிமகனும் எடுத்து கொள்ள வேண்டும். தேச நலன்கனை ஒன்றுபட்டு, பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டில் பிரிவினை செயல் திட்டங்களால், இந்தியாவின் அமைதி மற்றும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ள சக்திகள் மற்றும் அவர்களின் விருப்பங்களில் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.