டார்ஜிலிங்கில் சாலையோர கடைசியில் பானி பூரி தயாரித்து மக்களுக்கு வழங்கி அசத்திய மம்தா பானர்ஜி..!


டார்ஜிலிங்கில் சாலையோர கடைசியில் பானி பூரி தயாரித்து மக்களுக்கு வழங்கி அசத்திய மம்தா பானர்ஜி..!
x

மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி டார்ஜிலிங்கில் சாலையோர கடைசியில் பானி பூரி தயாரித்து மக்களுக்கு வழங்கி அசத்தினார்.

டார்ஜிலிங்,

மேற்கு வங்காளத்தில், மலைகளின் ராணி என்ற செல்லப்பெயரை கொண்ட டார்ஜிலிங் நகரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி டார்ஜிலிங்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அங்கே அவர் சாலையோரத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தி வருகிற 'சண்டே ஹாட்' என்ற பானி பூரி கடைக்கு சென்றார். அங்கிருந்த பெண்கள், பானி பூரி தயாரித்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதைக் கண்டார். அவர்களின் கடின உழைப்பைக் கண்டு பாராட்டினார். அத்துடன் அவர் நிற்கவில்லை.

எந்த தயக்கமும் இன்றி அந்தப் பெண்களுடன் தானும் சேர்ந்துகொண்டு உற்சாகமாக பானி பூரி தயாரித்தார். அவர் பூரிக்குள் மசித்த உருளைக்கிழங்கை வைத்து, புளித்தண்ணீரில் நனைத்து தனது கைப்பக்குவத்தை காட்டி அசத்தினார். அந்த பானி பூரியை அவர் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினார். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

கடை உரிமையாளரிடம், இவர் நமது விருந்தினர் என்று சொல்லி, ஒருவரைக் காட்டி அவருக்கு பானி பூரி வழங்குமாறும் கேட்டார். இந்த காட்சிகள் கொண்ட வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் பகிர, அது மின்னல் வேகத்தில் வைரலானது.

மம்தா பானர்ஜி, டார்ஜிலிங்குக்கு கடந்த முறை சென்றபோது சாலையோர ஸ்டால் ஒன்றில் திபெத் உணவான 'மோமோ' தயாரித்துக்காட்டி அசத்தினார். 2019-ம் ஆண்டு, திகா நகருக்கு சென்று விட்டு கொல்கத்தா திரும்பும் வழியில் அவர் ஒரு டீக்கடையில் டீ தயாரித்து மக்களுக்கு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story