நாங்கள் நடுநிலையில் இல்லை; அமைதியின் பக்கம் இருக்கிறோம்: வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு பிரதமர் மோடி பேட்டி
பிரதமர் மோடி, சில நாடுகள் கூறுவதுபோல் நாங்கள் நடுநிலையில் இல்லை என்றும் அமைதியின் பக்கம் இருக்கிறோம் என வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், தூதரக அளவில் மற்றும் அமைதி பேச்சுவார்த்தை வழியே இரு நாடுகளும் தீர்வு காண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை பிரதமர் மோடி கடந்த வருடம் செப்டம்பரில் இருந்து கூறி வருகிறார். இந்தோனேசியாவில் நவம்பரில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின்போதும், போருக்கான சகாப்தம் இதுவல்ல என கூறி, இதனை அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக அவர் இன்று புறப்பட்டு சென்றார். இந்த சூழலில் பிரதமர் மோடி அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.
அதில், சர்வதேச சட்டம் மற்றும் நாடுகளின் இறையாண்மை ஆகியவற்றை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும். தூதரக அளவில் மற்றும் பேச்சுவார்த்தை வழியே விவாதங்கள் தீர்க்கப்பட வேண்டும். போரை கொண்டு அல்ல... சிலர், நாங்கள் நடுநிலைமையுடன் செயல்படுகிறோம் என கூறுகின்றனர்.
ஆனால், நாங்கள் நடுநிலைமையுடன் செயல்படவில்லை. நாங்கள் அமைதியின் பக்கம் இருக்கிறோம். இந்தியாவின் உச்சபட்ச முன்னுரிமை அமைதி என்பதில் உலக நாடுகள் முழு நம்பிக்கை கொண்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.