மும்பை பயங்கரவாத தாக்குதலை நாம் ஒருபோதும் மறந்து விட முடியாது: பிரதமர் மோடி


மும்பை பயங்கரவாத தாக்குதலை நாம் ஒருபோதும் மறந்து விட முடியாது: பிரதமர் மோடி
x

இந்தியாவில் இன்றைய தினம், நாட்டு மக்கள் பல மாற்றங்களை முன்னெடுத்து செல்கின்றனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார்

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ந்தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின்னர், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 30-ந்தேதி ஒலிபரப்பு செய்யப்பட்டது. அப்போது, வெளியிடப்பட்ட தரவின் அடிப்படையில், 100 கோடி பேர் ஒரு முறையாவது, மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்டு உள்ளனர். 23 கோடி பேர் சீராக இந்நிகழ்ச்சியை கவனித்தும், பார்த்தும் வருகின்றனர் என தெரிய வந்தது.

இந்நிலையில், 107-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும்போது, தேச கட்டமைப்பில் பொதுமக்கள் பங்கேற்கும்போது, முன்னோக்கி செல்வதற்கு எதிராக எதுவும் அதனை தடுத்து நிறுத்த முடியாது என கூறினார்.

இந்தியாவில் இன்றைய தினம், நாட்டு மக்கள் பல மாற்றங்களை முன்னெடுத்து செல்கின்றனர். நாட்டில், நவம்பர் 26-ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலை நாம் ஒருபோதும் மறந்து விட முடியாது.

நம்முடைய நாட்டில், ஒரு கொடூர தாக்குதல் நடைபெற்ற தினம் இன்று. இந்த தாக்குதலில் உயிரிழந்த மக்கள் அனைவருக்கும் என்னுடைய அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன். நாம் இப்போது, முழு தைரியத்துடன் பயங்கரவாதத்தினை ஒழித்து கொண்டிருக்கிறோம் என்று அவர் பேசியுள்ளார்.


Next Story