சீர்திருத்தத்தை நோக்கி முன்னேற வேண்டும் - பிரதமர் மோடி


சீர்திருத்தத்தை நோக்கி முன்னேற வேண்டும் - பிரதமர் மோடி
x

தேர்தல் தீவிரம் என் உள்ளத்திலும் மனதிலும் எதிரொலிப்பது இயல்பு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி

தேர்தல் பிரசாரம் முடியும்போது ஆன்மிக பயணம் சென்று தியானம் செய்வதை பிரதமர் மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் மராட்டிய மாநிலத்தில் பிரதாப்கர் கோட்டையிலும், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்தபோது அவர் இமயமலையில் உள்ள கேதார்நாத் குகையிலும் தியானம் செய்தார்.

இந்தமுறை அவர் தியானம் செய்ய நாட்டின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தேர்வு செய்தார். அதன்படி கடந்த 30-ம் தேதி இங்கு வந்த பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாள் தங்கி இருந்து தியானத்தை முடித்து சென்றுள்ளார்.

பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. பிரதமர் மோடியின் தியானத்தால் விவேகானந்தர் மண்டபம் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரியில் தியானத்தில் இருந்தபோது, மனதில் தோன்றிய சிந்தனைகளை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அதில், சீர்திருத்தத்தின் திசையை நோக்கி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நாம் முன்னேறி செல்ல வேண்டும். சீர்திருத்தம் தொடர்பான நமது பாரம்பரிய சிந்தனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். நான் ஒரு தியான நிலைக்குள் நுழைந்தேன், என் கண்கள் ஈரமாகிக் கொண்டிருந்தன. சூடான அரசியல், விவாதங்கள், தாக்குதல்கள், எதிர் தாக்குதல்கள், குற்றச்சாட்டுகள் போன்ற தேர்தல் குணாதிசயங்கள் அனைத்தும் வெற்றிடத்தில் மறைந்து போயின. எனக்குள்ளே ஒரு பற்றின்மை உணர்வு வளர ஆரம்பித்தது. என் மனம் வெளி உலகத்திலிருந்து முற்றிலும் விலகியது.

பாரதத்திற்கு சேவை செய்யவும், நமது நாட்டின் சிறப்பை நோக்கிய பயணத்தில் நமது பங்கை நிறைவேற்றவும் கடவுள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளார். பாரதத்தில் கடவுள் நமக்கு பிறக்க அருளியதை நினைத்து ஒவ்வொரு நொடியிலும் நாம் பெருமை கொள்ள வேண்டும். ஒரு தேசமாக, காலாவதியான சிந்தனை மற்றும் நம்பிக்கைகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தொழில்முறை அவநம்பிக்கையாளர்களின் அழுத்தத்திலிருந்து நமது சமூகத்தை விடுவிக்க வேண்டும். 21-ம் நூற்றாண்டின் உலகம் பல நம்பிக்கைகளுடன் பாரதத்தை எதிர்நோக்கிப் பார்க்கிறது.

தேர்தல் தீவிரம் என் உள்ளத்திலும் மனதிலும் எதிரொலிப்பது இயல்பு. பொதுக்கூட்டத்திலும், சாலை பேரணியிலும் பார்த்த பல முகங்கள் என் கண் முன்னே வந்து சென்றது. பெண் சக்தியின் ஆசீர்வாதங்கள், நம்பிக்கை, பாசம், இவை அனைத்தும் மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story