காங்கிரசை வழிநடத்தும் தகுதி ராகுல்காந்திக்கு மட்டுமே உள்ளது - மல்லிகார்ஜுன கார்கே


காங்கிரசை வழிநடத்தும் தகுதி ராகுல்காந்திக்கு மட்டுமே உள்ளது - மல்லிகார்ஜுன கார்கே
x

காங்கிரசை வழிநடத்தும் தகுதி ராகுல்காந்திக்கு மட்டுமே உள்ளதாகவும், அவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்க வலியுறுத்துவோம் என்றும் நாடாளுமன்ற மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

குலாம் நபி ஆசாத் விலகல்

காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், காங்கிரசில் இருந்து விலகி உள்ளார். மேலும் அவர் ராகுல்காந்தி மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதற்கு பதிலடியாக காங்கிரசின் மற்றொரு மூத்த தலைவரும், நாடாளுமன்ற மேல்சபை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தி மீண்டும் காங்கிரசின் தலைவராக பதவி ஏற்க நாங்கள் வலியுறுத்துவோம். அவர் மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக வருவார். அவரைத்தவிர வேறு யாருக்கும் காங்கிரசை வழிநடத்தும் பக்குவம் இல்லை. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையும், மேற்கு வங்காளம் முதல் குஜராத் வரையும் யார் நாட்டைப்பற்றி நன்றாக அறிந்திருக்கிறார்களோ? அவருக்குதான் காங்கிரசை வழிநடத்தும் தகுதி இருக்கிறது. அந்த வகையில் அந்த தகுதி ராகுல்காந்திக்கு மட்டும்தான் இருக்கிறது.

ராகுல்காந்திக்கு நிகர் யாரும் இல்ைல

அவர் ஒருவர்தான் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். மேலும் அனைவருடனும் ஒன்றிணைந்து ஏற்றுக் கொள்ளக்கூடியவர். அதனால் அவருக்கு நிகர் யாரும் இல்லை. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ராகுல்காந்தி தான் அடுத்த தலைவராக வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவருக்கு மாற்று வேறு யாரும் உண்டா?. ராகுல்காந்திக்கு தலைமையை ஏற்க மனமில்லை என்றாலும் நாங்கள் அவரை விடாமல் வலியுறுத்துவோம்.

தலைமை ஏற்று கட்சி, நாட்டை காப்பாற்றவும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவுக்கு எதிராக போராடி நாட்டை ஒருங்கிணைக்கவும் வலியுறுத்துவோம். அவருக்கு பின்னால் நாங்கள் எப்போதும் இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story