வீணடிப்பில் இருந்து வளம்; தூய்மை இந்தியாவின் முக்கிய பரிமாணம்: பிரதமர் மோடி உரை


வீணடிப்பில் இருந்து வளம்; தூய்மை இந்தியாவின் முக்கிய பரிமாணம்:  பிரதமர் மோடி உரை
x

பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்து நல்ல வருவாய் ஈட்டுவதுடன், தூய்மையும் உறுதிப்படுத்தப்படுகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.



புதுடெல்லி,


பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். அதன்படி, பிப்ரவரி மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இது 98-வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, தூய்மை இந்தியா திட்டத்தில், வீணடிப்பில் இருந்து வளம் என்பதும் ஒரு முக்கிய பரிமாணம் என கூறியுள்ளார். இதற்கு சான்றாக 2 எடுத்துக்காட்டுகளை அவர் முன் வைத்து உள்ளார்.

இதன்படி, அரியானாவில் துல்ஹெடி கிராம இளைஞர்கள், பிவானி நகர் தூய்மையில் தனித்துவமுடன் இருக்க வேண்டும் என முடிவு செய்து உள்ளனர்.

இதற்காக இளைஞர்கள் பலர் அடங்கிய யுவ ஸ்வச்தா இவாம் ஜனசேவா சமிதி என்ற பெயரிலான அமைப்பு ஒன்றை அவர்கள் தொடங்கியுள்ளனர். இதன்படி, அந்த குழுவில் உள்ள இளைஞர்கள், அதிகாலை 4 மணிக்கு பிவானி நகரை அடைந்து, பல்வேறு இடங்களில் தூய்மை பணியை மேற்கொண்டனர்.

இதில், டன் கணக்கிலான குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தி உள்ளனர் என கூறியுள்ளார். இதேபோன்று, ஒடிசாவில் கேந்திராபாரா மாவட்டத்தில் கமலா மொஹராணா என்ற பெண்மணி சுய உதவி குழு ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த குழுவில் உள்ள மகளிர் சேர்ந்து, பால் கவர்கள் மற்றும் பிற பிளாஸ்டிக் கவர் பொருட்களை கொண்டு கூடைகள் மற்றும் மொபைல் போன்களை சாய்த்து நிற்க வைக்க உதவும் ஸ்டாண்டுகள் போன்றவற்றை உருவாக்கி உள்ளனர்.

இதனால், பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்து நல்ல வருவாய் ஈட்டுவதுடன், தூய்மையும் உறுதிப்படுத்தப்படுகிறது என அவர் பேசியுள்ளார்.

நாம் ஒரு தீர்மானம் எடுத்து விட்டால், தூய்மை இந்தியாவுக்கு என ஒரு பெரிய பங்காற்ற முடியும். குறைந்தது, பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி பைகளை எடுத்து செல்வோம் என ஓர் உறுதிமொழியையாவது நாம் அனைவரும் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது உரையின்போது பேசியுள்ளார்.


Next Story