திருமண பரிசு... ஹோம் தியேட்டர் வெடித்து புதுமாப்பிள்ளை பலி; மணமகளின் முன்னாள் காதலர் கைது


திருமண பரிசு... ஹோம் தியேட்டர் வெடித்து புதுமாப்பிள்ளை பலி; மணமகளின் முன்னாள் காதலர் கைது
x

சத்தீஷ்காரில் திருமண பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டர் வெடித்து சிதறி புதுமாப்பிள்ளை, அவரது சகோதரர் பலியான விவகாரத்தில் மணமகளின் முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் கபீர்தம் மாவட்டத்தில் சமரி கிராமத்தில் ரெங்காகார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஹேமேந்திரா மேராவி (வயது 30). இவருக்கும் அஞ்சனா கிராமத்தில் வசித்து வரும் 29 வயது பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து உள்ளது.

அந்த ஜோடிக்கு கடந்த 1-ந்தேதி மணமகன் வீட்டில் வைத்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதன்பின்பு, திருமணத்தின்போது கிடைத்த பரிசு பொருட்களை ஹேமேந்திராவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் அவரது வீட்டில் வைத்து கடந்த திங்கட்கிழமை பிரித்து பார்த்து உள்ளனர்.

இதில், ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டம் ஒன்றும் இருந்து உள்ளது. அதனை ஆவலுடன் பிரித்த அவர், மின்சார போர்டில் வயரை இணைத்து விட்டு அதனை இயக்கி உள்ளார். ஆனால், பாடல் பாடுவதற்கு பதிலாக திடீரென அது வெடித்து சிதறி உள்ளது.

இதில், அந்த அறையின் சுவர்கள் மற்றும் மேற்கூரை இடிந்து விழும் அளவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே புதுமாப்பிள்ளை பலியானார்.

அவரது சகோதரர் ராஜ்குமார் (வயது 32), ஒன்றரை வயது சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக கவ்ராதா மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும், ஹேமேந்திராவின் சகோதரர் உயிரிழந்து விட்டார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் மற்றும் தடய அறிவியல் குழு சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியது.

அந்த அறையில் வெடிப்பதற்கான வேறு பொருள் எதுவும் இல்லை. இந்த இசை உபகரணம் மட்டுமே அந்த அறையில் இருந்து, வெடித்து உள்ளது என ரெங்காகார் காவல் நிலைய உயரதிகாரி துர்கேஷ் ராவ்தே கூறியுள்ளார். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதில், திடுக்கிடும் தகவல் வெளிவந்து உள்ளது. இதுபற்றி கபீர்தம் போலீஸ் சூப்பிரெண்டு லால் உமத் சிங் கூறும்போது, திருமண ஜோடியை கொலை செய்யும் நோக்கில் ஹோம் தியேட்டரில் வெடிகுண்டு ஒன்றை இணைத்து இருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில், மணமகளின் முன்னாள் காதலர் ஈடுபட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து, குற்றவாளியான சர்ஜூ மர்காம் என்பவரை போலீசார் கைது செய்தனர். சர்ஜூவுக்கு திருமணம் நடந்து விட்டது. பாலாகாட் மாவட்டத்தின் சாப்லா கிராமத்தில் வசித்து வருகிறார்.

அவருக்கும் ஹேமேந்திராவின் மனைவிக்கும் திருமணத்திற்கு முன்பு தொடர்பு இருந்து வந்து உள்ளது. திருமணம் நிச்சயம் ஆனதும், சர்ஜூ உடனான தொடர்பை அவர் துண்டித்து விட்டார்.

இதனால், சர்ஜூ வருத்தத்தில் இருந்து உள்ளார். இதனை தொடர்ந்தே பிரபல நிறுவன ஹோம் தியேட்டர் ஒன்றை வாங்கி வெடிகுண்டு இணைத்து பரிசாக அளிக்கும் திட்டத்தினை நிறைவேற்றி உள்ளார்.

கல் உடைத்து, தூள் செய்யும் ஆலையில் பணியாற்றிய அனுபவம் கொண்டதுடன், ஆட்டோ மெக்கானிக்காகவும் சர்ஜூ பணியாற்றி வந்து உள்ளார்.

ஹேமேந்திராவின் மனைவிக்கும், சர்ஜூவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் உதவியுடன் குற்றவாளியை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவத்தில் மணமகள் உயிர் தப்பி விட்ட நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story