மேற்கு வங்காளம்: பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து, 7 பேர் பலி; மம்தா பானர்ஜி இழப்பீடு அறிவிப்பு


மேற்கு வங்காளம்: பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து, 7 பேர் பலி; மம்தா பானர்ஜி இழப்பீடு அறிவிப்பு
x

மேற்கு வங்காளத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர்வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் பலியான சம்பவத்தில் மம்தா பானர்ஜி இழப்பீடு அறிவித்து உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தில் ஈக்ரா நகரில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் இன்று திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் சிக்கி தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதனை கிழக்கு மித்னாப்பூர் காவல் கண்காணிப்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த சம்பவம் பற்றி முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்ட செய்தியில், வெடிவிபத்து சம்பவம் பற்றி அறிந்து வருத்தம் அடைந்தேன். காயமடைந்த நபர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இந்த விவகாரம் பற்றி சி.ஐ.டி. விசாரணை மேற்கொள்ளும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மேற்கு வங்காள அரசு ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்கும். காயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

இதுதவிர, இலவச சிகிச்சையும் வழங்குவோம் என்று கூறியுள்ளார். இந்த பட்டாசு ஆலை சட்டவிரோத வகையில் இயங்கி வருகிறது என கூறப்படுகிறது. போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story