பல்கலைக்கழக வேந்தராக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி: மேற்குவங்க சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
பல்கலைக்கழக வேந்தராக முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை நியமனம் செய்யும் மசோதா, மேற்குவங்க சட்டசபையில் நிறைவேறியது.
கொல்கத்தா,
நாடுமுழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பல்கலைக்கழக வேந்தராக கவர்னர் செயல்படுகிறார். அதேபோல் துணைவேந்தரை நியமிப்பதிலும் கவர்னர் முக்கிய பங்கு வகிக்கிறார். தமிழகம், மேற்குவங்காளம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்களில் மாநில கவர்னர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் கவர்னருக்கு பதிலாக முதல்-அமைச்சரை பல்கலைக்கழக வேந்தர்களாக நியமனம் செய்ய இந்த மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களில் வேந்தராக கவர்னருக்கு பதிலாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை நியமனம் செய்யும் மசோதா அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக மேற்குவங்க மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் அனைத்து விதமான பல்கலைக்கழகங்களின் வேந்தராக கவர்னருக்கு பதிலாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை நியமிக்கும் மசோதாவுக்கு அண்மையில் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து சட்டசபையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டு அவையின் ஒப்புதல் பெறப்பட்டது.
மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் அம்மாநில கவர்னர் ஜெகதீப் தன்கர் இடைய ஏற்கெனவே மோதல் போக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.