கர்நாடகாவின் முதல்-மந்திரி பற்றி டி.கே. சிவக்குமார் கூறியது என்ன...?


கர்நாடகாவின் முதல்-மந்திரி பற்றி டி.கே. சிவக்குமார் கூறியது என்ன...?
x

கர்நாடகாவின் முதல்-மந்திரி பற்றி கட்சி தலைமையே முடிவு மேற்கொள்ளும் என்றும் நாங்கள் அனைவரும் ஒன்றாகவே இருக்கிறோம் மற்றும் இணைந்தே பணியாற்றுவோம் என டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆட்சியமைக்கும் அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, அக்கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நேற்று கூடி ஆலோசனை மேற்கொண்டு இறுதி அறிக்கையை கட்சி மேலிடத்திற்கு வழங்கி உள்ளது. அந்த அறிக்கையை கொண்டு கட்சி தலைமை ஆலோசித்து, முடிவு செய்து கர்நாடக முதல்-மந்திரி யாரென்று அறிவிக்க உள்ளது.

இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, வேறு எதுவும் விமர்சிக்கவோ அல்லது கூறவோ நான் விரும்பவில்லை. நான் என்ன பேச வேண்டுமோ, அதனை முன்பே பேசி விட்டேன். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை நான் விரும்பவில்லை. அது எனக்கு முக்கியமல்ல. எங்களுடையது காங்கிரஸ் அமைப்பு. 135 என்பது எண்ணிக்கை. கூடுதலாக கூட்டணியில் உறுப்பினர் ஒருவர் உள்ளார். நாங்கள் அனைவரும் ஒன்றாகவே இருக்கிறோம். இணைந்தே பணியாற்றுவோம் என கூறியுள்ளார். அவர் தொடர்ந்து, நான் இன்று டெல்லிக்கு போக விரும்பினேன். ஆனால், கடந்த 4 மணிநேரம் எனக்கு சில சுகாதார பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன என்றார்.

கட்சியின் தலைவராக இருந்து வெற்றிக்கு வழிநடத்தியதற்காக, முதல்-மந்திரி பதவிக்கு நீங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா? என கேட்டதற்கு அவர் அளித்த பதிலில், அதுபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை.

அரசியலில் யார் வெற்றி பெறுகிறார்கள் அல்லது யார் தோல்வி அடைகிறார்கள் என்பது மட்டுமே விசயம். எப்படி வெற்றி கிடைத்தது என்பது முக்கியம் இல்லை. கடவுள் கருணையால், நல்ல முடிவு கிடைத்து உள்ளது. இனி, மக்கள் காட்டிய நம்பிக்கைக்கு நாங்கள் பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

அவரது ஆதரவாளர்கள், அவர் முதல்-மந்திரியாக வரவேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், இதற்கு முன்பு அவர் இன்று கூறும்போது, காங்கிரஸ் மேலிடம், என்னையும், சித்தராமையாவையும் டெல்லி வரும்படி அழைத்து உள்ளது.

சோனியா காந்தி மற்றும் கார்கே எனக்கு தலைவர் பதவியை வழங்கினார்கள். எனது தலைமையிலேயே 135 சீட்டுகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. எப்போது அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்களை விட்டு போனார்களோ, எங்களது ஆட்சியை நாங்கள் இழந்தோமோ, அப்போது, நான் நம்பிக்கையை இழக்கவில்லை என கூறினார். (கடந்த 2019-ம் ஆண்டு காங்கரஸ் மற்றும் ம.ஜ.த. கூட்டணி கட்சி ஆட்சியை பற்றி அவர் குறிப்பிட்டு உள்ளார்).

கடந்த 5 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்களை வெளியிட நான் விரும்பவில்லை. நான் ஒரு தனிமனிதன். எனக்கு ஒரு விசயத்தில் நம்பிக்கை உள்ளது. ஒரு தனிமனிதன் தைரியத்துடன் இருந்து மெஜாரிட்டியை பெற முடியும். எல்லா எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு போனபோது, நான் மனம் தளரவில்லை என கூறினார். இதனால், கர்நாடக முதல்-மந்திரிக்கான போட்டியில் சிவக்குமாரும் இருக்கிறார் என்று தெளிவுப்படுத்தினார்.

இந்த நிலையில், இரவு 7 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே. சிவக்குமார் கூறும்போது, எனக்கு வயிறு பாதிப்பு உள்ளது. அதனால் டெல்லிக்கு நான் இன்று பயணம் செய்ய முடியாது என கூறினார். இதன்பின்னர் அவர், 135 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால், என்னிடம் எந்த எம்.எல்.ஏ.க்களும் இல்லை. முதல்-மந்திரி முடிவை கட்சியின் மேலிடத்திடம் விட்டு விட்டேன் என்று கூறினார்.


Next Story