சூரியனின் ஆழ்ந்த தூக்கத்தில் என்ன நடக்கும்? இந்திய விஞ்ஞானிகளின் ஆச்சரிய தகவல்கள்...


சூரியனின் ஆழ்ந்த தூக்கத்தில் என்ன நடக்கும்? இந்திய விஞ்ஞானிகளின் ஆச்சரிய தகவல்கள்...
x

சூரியனை பற்றி 10 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி சென்று, அதன் செயல்பாடுகளை கண்டறிந்து இந்திய விஞ்ஞானிகள் தனித்துவ தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.புதுடெல்லி,


சூரியனை பற்றி ஆய்வு மேற்கொள்ளும் பணியில் அமெரிக்காவின் நாசா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதேபோன்று, ஐரோப்பாவும் சூரியனை பற்றி அறியும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக நாசா அமைப்பு, பார்க்கர் சோலார் புரோப் என்ற பெயரிலும், ஐரோப்பிய அமைப்பு சோலார் ஆர்பிட்டர் என்ற பெயரிலும் திட்டங்களை செயல்படுத்தி, விண்வெளி வானிலை உள்ளிட்ட விசயங்களை பற்றி புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவும், சூரியனை பற்றி விரிவாக ஆய்வு செய்ய திட்டமிட்டு, அதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் ஒன்றை அனுப்ப முடிவு செய்துள்ளது. 2023-ம் ஆண்டில் இந்த திட்ட செயல்பாடு நடைமுறைப்படுத்த முடிவாகி உள்ளது.

இதன் நோக்கம், சூரியனின் மேற்பரப்பு, சூரிய புயல், சூரிய வெடிப்பு, பிளாஸ்மா வெளியேற்றம் உள்ளிட்டவை பற்றி ஆய்வு செய்யப்படும்.

இந்த ஆண்டில் சூரிய சுழற்சி, அதிக தீவிர செயல்பாட்டுடன் உச்சமடைந்து காணப்படுகிறது. அதிலும், கடந்த வாரம் 3 சூரிய வெடிப்புகள், 18 பெரிய அளவிலான பிளாஸ்மா வெளியேற்றம் மற்றும் ஒரு புவிகாந்தப்புயல் ஆகியவை ஏற்பட்டு உள்ளன.
ஆனால், இதற்கு முன்பு ஒரு போதும் இந்த அளவுக்கு ஏற்பட்டது இல்லை. சூரியனின் மேற்பரப்பில் காணப்படும் சூரிய புள்ளிகள் முற்றிலும் மறைந்து, சூரியன் ஆழ்ந்து தூங்குவது போன்று காணப்பட்ட காலங்களும் முன்பு இருந்துள்ளன.

இதுபற்றி இந்தியாவின் கொல்கத்தா நகரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.) உள்ள விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகள் ராயல் அஸ்டிரானமிக்கல் சொசைட்டி செய்தி நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளன.

அந்த ஆய்வில், சூரியன் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, துருவ மற்றும் உட்பகுதிகளில் கடுமையாக சுழன்று கொண்டே இருக்கும். இந்த அமைதியான காலங்களில் கூட சூரிய சுழற்சியானது கடுமையான பணிகளை செய்கிறது என தெரிய வந்துள்ளது.

கடந்த காலங்களில், சூரிய புள்ளிகள் எதுவும் காணப்படாமல் சூரியனின் செயல்கள் மந்தநிலையை அடைந்திருந்தன. இந்த காலத்திற்கு கிராண்ட் மினிமம் என ஆய்வாளர்கள் பெயரிட்டு உள்ளனர். இதனால், சூரிய கதிர்வீச்சு மற்றும் வெளிப்படுதல் குறைந்து காணப்படும்.

இந்த காலங்களில், சூரியனின் காந்தபுல சுழற்சி நிறுத்தப்பட்டு விடும் என பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆனால், இந்த புதிய ஆய்வு முடிவானது, சூரியனின் செயல் முற்றிலும் நின்று விடாது என சுட்டி காட்டியுள்ளது.

இந்த ஆய்வில், ஆராய்ச்சி மாணவர்களான சித்ரதீப் சகா மற்றும் சங்கீதா சந்திரா ஆகியோருடன் பேராசிரியர் திப்யந்து நான்டி என்பவரும் ஈடுபட்டுள்ளார். அதன்படி, சூரியனின் உட்புற பகுதியில் காந்தபுலங்கள் செயல்பாட்டு நிலையிலேயே இருக்கும்.

எனினும், சூரிய புள்ளிகளை உருவாக்க முடியாத அளவுக்கு பலவீனம் அடைந்த நிலையிலான காந்த செயற்பாடுகள் தொடரும் என அவர்கள் கூறியுள்ளனர்.

எங்களுடைய 10 ஆயிரம் வருட நீண்ட கணினி தூண்டுதல்களின்படி, இப்படி நிறுத்தம் இல்லாமல் தொடரும் பிளாஸ்மா இயக்கம் மற்றும் வெப்ப சலன மண்டலத்தின் செயல்பாடுகள், சூரியன் மீண்டும் தனது சீரான காந்தபுல செயலை தொடர்வதற்கு உதவுகிறது என்று சித்ரதீப் கூறியுள்ளார்.

இதனால், சூரியனை பற்றிய ஆய்வில் புது திருப்புமுனையான விசயம் வெளிப்பட்டு உள்ளது. வருங்காலத்தில் சூரியனை பற்றிய இன்னும் வெளிவராத பல புதிய விசயங்கள் வெளியிட இந்த ஆய்வு உதவும்.


Next Story