என்ன நடக்குது...!! வீட்டு உரிமையாளரிடம் தன்னை வைத்து சூதாடி இழந்த பெண்ணின் அடுத்த அதிரடி


என்ன நடக்குது...!!  வீட்டு உரிமையாளரிடம் தன்னை வைத்து சூதாடி இழந்த பெண்ணின் அடுத்த அதிரடி
x
தினத்தந்தி 5 Dec 2022 7:34 PM IST (Updated: 6 Dec 2022 5:51 AM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் ஆன்லைன் கேமிங் மோகத்தில், தன்னையே வைத்து சூதாடி வீட்டு உரிமையாளரிடம் தோற்ற பெண்ணின் அதிரடி முடிவு அதிர வைத்துள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் பிரதாப்கார் மாவட்டத்தில் நாகர் கொத்வாலி பகுதியில் தேவகாளி என்ற இடத்தில் வசித்து வரும் நபரின் மனைவி ரேனு. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரேனுவின் கணவர், குடும்ப பொறுப்பை ஏற்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகருக்கு வேலை தேடி சென்றுள்ளார்.

அவர் சிறுக, சிறுக சேர்த்து வைத்த தொகையை வீட்டுக்கு அனுப்பி வந்துள்ளார். ஆனால், ரேனுவுக்கு ஆன்லைன் கேமிங்கில் ஆர்வம் இருந்து உள்ளது. லுடோ எனப்படும் பகடை விளையாட்டை ஆன்லைன் வழியே விளையாடி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், தனது வீட்டின் உரிமையாளருடன் சேர்ந்து கொண்டு, ஆன்லைன் வழியே லுடோ விளையாட்டை விளையாடி இருக்கிறார். பின்னர், பணம் வைத்து விளையாட தொடங்கி இருக்கிறார்.

அவரது கணவர் அனுப்பிய பணம் கரைந்துள்ளது. அவரும் விளையாட்டில் வென்றபாடில்லை. கணவரின் பணம் தீர்ந்ததும், என்ன செய்வதென யோசித்தவர், சற்றும் யோசிக்காமல் சட்டென வீட்டு உரிமையாளரிடம் தன்னையே வைத்து விளையாடுகிறேன் என கூறியுள்ளார். வீட்டு உரிமையாளரும் சரி என்று ஒப்பு கொண்டார்.

ஆனால், அந்த விளையாட்டில் ரேனுவுக்கு தோல்வியே மிஞ்சியது. இதுபற்றி தனது கணவரிடம் தொலைபேசி வழியே அவர் தெரிவித்து உள்ளார். இதனையறிந்து, ரேனுவின் கணவர் ஊருக்கு திரும்பி போலீசில் புகார் அளித்து உள்ளார்.

எனினும், நிலைமை அதன்பின்பு மோசமடைந்து உள்ளது. இதுபற்றி ரேனுவின் கணவர் கூறும்போது, ரேனு வீட்டு உரிமையாளரிடமே சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார். ரேனுவை, அவரை விட்டு விலகி வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், ரேனு அதற்கு தயாராக இல்லை என சமூக ஊடகத்தில் நடந்த சம்பவம் பற்றி தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுபற்றி காவல் அதிகாரி சுபோத் கவுதம் கூறும்போது, அந்த நபருடன் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். அவரை தொடர்பு கொண்டதும் நாங்கள் விசாரணையை தொடங்குவோம் என்று கூறி விட்டு சென்று விட்டார்.

1 More update

Next Story