கார் விபத்துக்கான காரணம் என்ன...? முதல்-மந்திரி தமியிடம் கூறிய ரிஷப் பண்ட்
கார் விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமியிடம் ரிஷப் பண்ட் இன்று கூறியுள்ளார்.
டேராடூன்,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் (வயது 25). இவர் கடந்த டிசம்பர் 30-ந்தேதி அதிகாலை டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு மெர்சிடிஸ் ரக சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி சென்றார்.
டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஹம்மத்பூர் ஜல் என்ற இடத்திற்கு அருகே ரூர்கியின் நர்சன் எல்லை பகுதியில் அதிவேகமாக சென்றபோது, அன்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அவரது தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு, டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய அரியானா போக்குவரத்து கழகத்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு வருகிற குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) உத்தரகாண்ட் அரசு கவுரவம் வழங்கும் என கூறியுள்ளார்.
இதன்பின்னர் ரிஷப் பண்ட்டை மருத்துவமனைக்கு சென்று தமி பார்வையிட்டு, உடல்நலம் பற்றி கேட்டறிந்து உள்ளார். அவரிடம் விபத்துக்கான காரணம் பற்றி பண்ட் கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, சாலையில் பள்ளம் அல்லது கருப்பு நிற பொருள் ஒன்று இருந்தது விபத்து ஏற்பட காரணம் என குறிப்பிட்டு உள்ளார். இதற்கு முன்பு வெளியான தகவலில், பண்ட் கார் ஓட்டும்போது, சற்று கண் அயர்ந்ததில் விபத்து ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது.