ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்டுவிட்டார்: சோனியா காந்தி தகவல்


ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்டுவிட்டார்: சோனியா காந்தி தகவல்
x

ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்துப் பேசியதற்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்டுவிட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவை, ராஷ்டிரபத்னி என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

ராஷ்டிரபதி பவனுக்கு அணிவகுத்து செல்வது குறித்து பேசிய அவர், 'ராஷ்டிரபத்னி' என்று குறிப்பிட்டார். அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். தான் ஒருபோதும் இந்திய ஜனாதிபதியை அவமரியாதை செய்ய விரும்பவில்லை என்றும், ஊடகங்களிடம் பேசும்போது கவனக்குறைவாக ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார். ஆளும் பாஜக இந்த விஷயத்தை பெரிதாக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வேண்டுமென்றே இவ்வாறு ஜனாதிபதியை அவமதித்திருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்துக்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்துப் பேசியதற்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்டுவிட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 'அவர் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டார்' என்று கூறினார்.


Next Story