இந்திரா காந்தி பிரதமரானதும் எனது தந்தை முதல் ஆளாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்திரா காந்தி பிரதமரானதும் எனது தந்தையை செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் அளித்த பேட்டியின்போது, வெளியுறவு பணியில் உயரதிகாரியாக இருந்து தொடங்கி, அரசியலுக்குள் நுழைந்த தனது பயணம் பற்றி பேசினார். எப்போதும் ஒரு சிறந்த அதிகாரியாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்த அவர், வெளியுறவு செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டேன் என கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, எனது வீட்டை எடுத்து கொண்டால், எனது தந்தை ஓர் உயரதிகாரியாக இருந்தவர். செயலாளர் பதவியை வகித்தவர். ஆனால், அந்த பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
1979-ம் ஆண்டில் ஜனதா அரசில் அந்நேரத்தில் இளம் வயதில் செயலாளராக இருந்தவர் அவர். 1980-ம் ஆண்டு பாதுகாப்பு உற்பத்தி துறையில் செயலாளரானார்.
அப்போது, இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவர் நீக்கிய முதல் செயலாளர் எனது தந்தை ஆவார். பாதுகாப்பு துறையில் உள்ள ஒவ்வொருவரும், அவர் அதிக அறிவுள்ளவர் என கூறுவார்கள்.
எனது தந்தை நேர்மையான நபர், அதனால் கூட பிரச்சனை தோன்றி இருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியாது. ஆனால், உண்மை என்னவென்றால், அதிகாரியாக பணியில் உயர்ந்தவர் மேற்கொண்டு, உயர் பதவிக்கு செல்லவேயில்லை.
அவர் மீண்டும் செயலாளராக வரவேயில்லை. ராஜீவ் காந்தி காலத்திலும் அவருக்கு இளநிலையில் இருந்த ஒருவர் கேபினட் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். அதனை அவர் நன்றாகவே உணர்ந்தவர்.
இதுபற்றி நாங்கள் பேசுவது அரிது. அதனால், எனது மூத்த சகோதரர், செயலாளர் ஆனதும் அவர் ரொம்ப பெருமைப்பட்டார் என கூறியுள்ளார். 2015-ம் ஆண்டு ஜனவரி முதல் 2018-ம் ஆண்டு ஜனவரி வரை மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியுறவு செயலாளராக இருந்து உள்ளார். சீனா மற்றும் அமெரிக்காவுக்கான முக்கிய தூதரக பதவிகளையும் அவர் வகித்து உள்ளார்.