"மதம் என்ற பெயரில் நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்?" - வெறுப்பு பேச்சுகள் குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து


மதம் என்ற பெயரில் நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்? - வெறுப்பு பேச்சுகள் குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து
x

அடிப்படை உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்க வேண்டிய கடமை கோர்ட்டுக்கு இருக்கிறது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் ஷாஹீன் அப்துல்லா என்ற பத்திரிகையாளர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் கே.எம். ஜோசப், ரிஷிகேஷ் ராய் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கெனவே நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், வெறுப்புப் பேச்சுகளை முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

எனினும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு கடந்த 9-ம் தேதி மீண்டும் புதுடெல்லியில் நிகழ்ந்துள்ளது. அதன் காரணமாகவே, தற்போது மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"நாட்டில் வெறுப்புச் சூழல் நிலவி வருவதால் புகார் மிகவும் தீவிரமானது. இது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசியலைப்பு சட்டம் பிரிவு 51-ஏ கூறுகிறது. ஆனால் மதம் என்ற பெயரில் நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்?

அடிப்படை உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்க வேண்டிய கடமை கோர்ட்டுக்கு இருக்கிறது. வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் காவல் துறை டி.ஜி.பி.க்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வெறுப்பு பேச்சுகளை பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகாருக்காக காத்திருக்காமல், காவல் துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அண்மையில் இந்தியாவிற்கு வருகை தந்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கள் குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story