இந்தியா கூட்டணியில் யாருக்கு எந்த பதவி.. இன்னும் 15 நாட்களில் முடிவு - மல்லிகார்ஜுன கார்கே
பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
புதுடெல்லி,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்நிலையில் கூட்டணியில் யாருக்கு எந்த பதவியை வழங்குவது என்பது குறித்து அடுத்த சில தினங்களில் முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"காங்கிரஸ் கட்சி அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் செயல்பட்டு வருகிறது. மேலும் அனைத்து இடங்களுக்கும் பார்வையாளர்களை நியமித்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து அனைத்து கட்சிகளுடன் கலந்தாலோசித்த பிறகு விரைவில் முடிவு செய்யப்படும்.
ஏற்கனவே அனைத்து தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற பார்வையாளர்களை இறுதி செய்துவிட்டோம். ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் சென்று மதிப்பீடு செய்வோம். அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிந்த பிறகு சரியான எண்ணிக்கை வெளியிடப்படும்.
வேட்பாளரை தேர்வு செய்வதில் கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நாடாளுமன்ற கண்காணிப்பாளர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இந்தியா கூட்டணியில் யார் எந்த பதவியை வகிக்க வேண்டும் என்பதை இன்னும் 10 முதல் 15 நாட்களில் முடிவு செய்வோம்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றனர். 2024 தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நீதியை நாம் நிலைநாட்ட முடியும்.
இந்திய கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்து பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த கூட்டங்களை எங்கு நடத்துவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம்."
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.