திரிபுரா, மேகாலயா, நாகாலாந்தில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்?


திரிபுரா, மேகாலயா, நாகாலாந்தில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்?
x
தினத்தந்தி 19 Jan 2023 9:33 AM IST (Updated: 19 Jan 2023 9:59 AM IST)
t-max-icont-min-icon

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 16, 27-ந் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

புதுடெல்லி,

நமது நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகியவற்றின் சட்டசபைகளின் ஆயுள் முடிவதால், அங்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. 3 மாநில சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 16, 27-ந் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில், தேர்தல் நடக்க உள்ள 3 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திரிபுராவில் கால்நூற்றாண்டாக மார்க்சிஸ்ட் கம்யூ. தலைமையிலான இடதுசாரி ஆட்சி நடந்து வந்தது. ஆனால் கடந்த 2018-ல் நடந்த தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. தற்போது அங்கு மாணிக் சகா முதல்-மந்திரியாக உள்ளார். 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பா.ஜ.க. 33, ஐ.பி.எப்.டி. கட்சி 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 15, காங்கிரஸ் 1 இடங்களை பெற்றுள்ளன. 7 இடங்கள் காலியாக உள்ளன.

இங்கு பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. எனவே இங்கு பலத்த போட்டி நிலவும்.

மேகாலயாவில் முதல்-மந்திரி கொன்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. மொத்தம் உள்ள 60 இடங்களில் என்.பி.பி. 20, யு.டி.பி. 8, திரிணாமுல் காங்கிரஸ் 8, பி.டி.எப். 2, பா.ஜ.க. 2, தேசியவாத காங்கிரஸ் 1 , சுயேச்சை 1 இடங்களைக் கொண்டுள்ளன. 18 இடங்கள் காலியாக உள்ளன.

இங்கு மாநிலக்கட்சியான என்.பி.பி. கட்சியின் ஆதிக்கம் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் களத்தில் தீவிரம் காட்ட விரும்புகிறது.

நாகாலாந்தில் முதல்-மந்திரி நைபியு ரியோ தலைமையில் என்.டி.பி.பி. ஆட்சி நடக்கிறது. இங்கு எதிர்க்கட்சியே இல்லை. கட்சிகளின் பலம் என எடுத்துக் கொண்டால், என்.டி.பி.பி. கட்சிக்கு 42, பா.ஜ.க.வுக்கு 12, என்.பி.எப். கட்சிக்கு 4 இடங்களும், சுயேச்சைகளுக்கு 2 இடங்களும் உள்ளன. இதுவும் மாநில கட்சியான என்.டி.பி.பி.யின் செல்வாக்கு நிலவுகிற மாநிலம் ஆகும்.


Next Story