நீதி விசாரணையை கண்டு பா.ஜனதாவினர் பயப்படுவது ஏன்?டி.கே.சிவக்குமார் கேள்வி


நீதி விசாரணையை கண்டு பா.ஜனதாவினர் பயப்படுவது ஏன்?டி.கே.சிவக்குமார் கேள்வி
x
தினத்தந்தி 28 Aug 2023 6:45 PM GMT (Updated: 28 Aug 2023 6:46 PM GMT)

கொரோனா முறைகேடுகள் விஷயம் தொடர்பான நீதி விசாரணையை கண்டு பா.ஜனதாவினர் பயப்படுவது ஏன்? என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு:-

பயப்படுவது ஏன்?

முந்தைய பா.ஜனதா அரசு மீது நாங்கள் கொரோனா உபகரணங்கள் கொள்முதல் முறைகேடு, ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு உள்பட பல்வேறு முறைகேடு புகார்களை கூறினோம். ஆனால் அதுபற்றி விசாரணை நடத்தப்படவில்லை.

அதனால் அதுபற்றி நாங்கள் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். பா.ஜனதாவினர் வகுத்த பாதையில் நாங்கள் பயணிக்கிறோம். இந்த நீதி விசாரணையை கண்டு பா.ஜனதாவினர் பயப்படுவது ஏன்?.

தற்கொலை செய்து கொண்ட காண்டிராக்டர் சந்தோஷ் பட்டீலின் குடும்பத்தினர் முதல்-மந்திரி மற்றும் என்னை சந்தித்து மீண்டும் விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டார். அவர்களின் கோரிக்கையை ஏற்று நாங்கள் அந்த காண்டிராக்டர் தற்கொலை குறித்து மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடத்துவோம்.

கவனம் செலுத்துகிறோம்

கொரோனா நெருக்கடி காலத்தில் மருத்துவ உபகரணங்களை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற வேண்டியது அவசியம். பா.ஜனதா ஆட்சி காலத்தில் எங்கள் மீது பொய் வழக்குகளை போட்டனர். இதனால் நாங்கள் கஷ்டப்படவில்லையா?. நைஸ் திட்டம் குறித்து எந்த விதமான விசாரணை வேண்டுமானாலும் நடத்தட்டும்.

கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோதே இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்போது குமாரசாமி இதை எதிர்ப்பது ஏன்?. ராமநகர் தாலுகா எல்லைக்கோட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இந்த மருத்துவ கல்லூரி அமைகிறது. நாங்கள் எங்கள் கட்சியின் வாக்கு வங்கியை அதிகப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துகிறோம்.

கிரகலட்சுமி திட்ட தொடக்க விழா

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்ட தொடக்க விழா என்பது அரசு விழா. அனைத்து தாலுகாக்களிலும் இந்த விழா நடக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் கட்சி பேதங்களை மறந்து இதில் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும்.

மைசூருவில் 30-ந்தேதி (நாளை) நடைபெறும் இந்த திட்ட தொடக்க விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவா்கள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story