வெறுப்பு பேச்சுகளால் ஆபத்து - சுப்ரீம் கோர்ட்டு


வெறுப்பு பேச்சுகளால் ஆபத்து - சுப்ரீம் கோர்ட்டு
x

வெறுப்பு பேச்சுகள் முழுமையான ஆபத்தை உருவாக்கியுள்ளன என சுப்ரீம் கோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.

பொதுநல மனுக்கள்

வெறுப்பு பேச்சுகளை தடுக்கக் கோரியும், வெறுப்பு பேச்சில் ஈடுபடுவோரை தண்டிக்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது.

விசாரணையின்போது உத்தரகாண்ட் அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் ஜதீந்தர்குமார் சேத்தி, வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக 23 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளதாக கூறினார்.

மத்திய அரசு ஆராய்கிறது

உத்தரபிரதேசத்தின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கரிமா பிரசாத், வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், பேச்சு சுதந்திரத்தில் தலையிடாமல், வெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்த குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது என்றார்.

செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல், வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சேனல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், டி.ஆர்.பி. போட்டியில் சிக்கியுள்ள செய்தி சேனல்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு சமூகத்தில் பாகுபாட்டை உருவாக்கிவருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயர்களை செய்தி சேனல்கள் குறிப்பிடுகின்றன.

முழுமையான ஆபத்து

தன்னுடைய பேச்சுகள் சமூகத்தில் தாக்கம் செலுத்தும் என்பதை ஊடகத்தில் பணியாற்றுவோர் நினைவில்வைக்க வேண்டும். மனதில் தோன்றியவற்றை பேசக்கூடாது.

வெறுப்பு பேச்சுகள் முழுமையான ஆபத்தை உருவாக்கியுள்ளன. செய்தி சேனல்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் நாளிதழ்களுக்கு இருப்பது போன்று செய்தி சேனல்களுக்கு பிரஸ் கவுன்சிலை உருவாக்க வேண்டும். நாட்டில் நடுநிலைமையான, சுதந்திரமான ஊடகங்கள் தேவை என்றும் குறிப்பிட்டனர். பின்னர் விசாரணையை தள்ளிவைத்தனர்.


Next Story