கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சி மேலிடம் ஆலோசனை ஏன்?- டி.கே.சிவக்குமார் பதில்


கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சி மேலிடம் ஆலோசனை ஏன்?- டி.கே.சிவக்குமார் பதில்
x

டெல்லியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சி மேலிடம் ஆலோசனை நடத்துவது ஏன்? என்று டி.கே.சிவக்குமார் பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு:-

அரசியலில் பரபரப்பு

கர்நாடக காங்கிரசின் மூத்த தலைவர் பி.கே.ஹரிபிரசாத் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசும்போது, எனக்கு ஒருவரை முதல்-மந்திரி ஆக்கவும் தெரியும், அவரை அந்த பதவியில் இருந்து கீழே இறக்கவும் தெரியும் என்று கூறினார். தனக்கு மந்திரி பதவி கிடைக்காததால் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே அவர் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. அவரது இந்த பேச்சு கர்நாடக காங்கிரசில் சலசலப்பையும், அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அவரை காங்கிரசின் மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினர்.

இந்த நிலையில் காங்கிரசில் பி.ஆர்.பட்டீல் எம்.எல்.ஏ. உள்பட சில எம்.எல்.ஏ.க்கள், தங்களுக்கு மந்திரிகள் மரியாதை தருவது இல்லை என்றும், தங்களின் பரிந்துரை கடிதங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை என்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புகார் கூறினர். இதனால் காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் செயல்களால் காங்கிரஸ் மேலிடமும் சற்று கவலை அடைந்துள்ளது.

நிர்வாகிகளுக்கு பொறுப்புகள்

இந்த நிலையில் கர்நாடகத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மந்திரிகள், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை டெல்லி வரும்படி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். மொத்தம் 37 தலைவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை (புதன்கிழமை) டெல்லியில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வருகிற 2-ந் தேதி (நாளை) கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுடன் கட்சி மேலிட தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளனர். ஆம், இது அரசியல் நோக்கத்துடன் நடைபெறும் கூட்டம். வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் ஒரு செயல் திட்டத்தை வகுக்கிறோம். கட்சி நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை வழங்க நான் விரும்புகிறேன்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு டிக்கெட் வழங்குவது, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களை நிறுத்துவதா? என்பது குறித்து விவாதிக்க உள்ளோம். டிக்கெட் வழங்க அளவுகோல் நிர்ணயம் செய்யப்படும். அதற்காக தான் இந்த கூட்டத்தை கட்சி மேலிடம் நடத்துகிறது. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் அதிருப்தி இல்லை. சில எம்.எல்.ஏ.க்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டுமாறு கேட்டுக் கொண்டனர். அதன்படி அந்த கூட்டத்தை நடத்தினோம்.

டெல்லியில் நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி சித்தராமையா மாவட்ட வாரியாக கட்சி நிா்வாகிகளின் கூட்டத்தை நடத்த உள்ளார். அங்கு அவர்களின் பிரச்சினைகளை தீா்க்க முதல்-மந்திரி நடவடிக்கை எடுப்பார். பி.ஆர்.பட்டீல் எம்.எல்.ஏ. எங்கள் கட்சியின் மூத்த தலைவர். அவர் எங்களின் முக்கியமான நண்பர். அவர் நெறிமுறைகள் சார்ந்த சில பிரச்சினைகளை எழுப்பியுள்ளார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.



Next Story