கவர்னர்களுக்கு ஏன் உரிமை அளிக்க வேண்டும் - காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி


கவர்னர்களுக்கு ஏன் உரிமை அளிக்க வேண்டும் - காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி
x

Image Courtacy: ANI

தினத்தந்தி 29 Sep 2022 4:57 PM GMT (Updated: 29 Sep 2022 4:58 PM GMT)

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க பாஜகவிற்கு எந்த ஒரு உரிமையும் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கூடலூர்,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கேரளாவில் மேற்கொண்டார். நேற்று 21-வது நாளாக மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த நிலையில், நிலம்பூர், வழிக்கடவு வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆமைகுளத்தை இன்று மாலை வந்தடைந்தார்.

இதனைத்தொடர்ந்து கூடலூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளில் தலையிட கவர்னர்களுக்கு ஏன் உரிமை அளிக்க வேண்டும். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினைக் கவிழ்ப்பதற்கு பாஜகவிற்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் என்ன உரிமை இருக்கிறது. பாஜக நாடு முழுவதும் ஒரே மொழி மற்றும் ஒரே கலாசாரம் என்பதை வலியுறுத்தி வருகிறது.

நாங்கள் ஒற்றுமையை விரும்புகிறோம். அதே வேளையில், நாட்டின் பன்முகத் தன்மைக்கும் மதிப்பளிக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கென தனி மொழி, கலாசாரம் உள்ளது. அவை மதிக்கப்பட வேண்டும். பாஜக ஆட்சியில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வும், கோபமும் அதிகரித்துள்ளது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு,குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் கூறினார்.


Next Story