பிரதமர் நிதிக்கு ஏன் தணிக்கை இல்லை? காங்கிரஸ் கேள்வி


பிரதமர் நிதிக்கு ஏன் தணிக்கை இல்லை?  காங்கிரஸ் கேள்வி
x

‘பி.எம்.கேர்ஸ்’ என்னும் பிரதமர் நிதிக்கு ஏன் தணிக்கை இல்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

'பி.எம்.கேர்ஸ்' சர்ச்சை

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

'பி.எம்.கேர்ஸ்' என அழைக்கப்படுகிற பிரதமர் நிதியைச் சுற்றிலும் சர்ச்சைகள் உள்ளன. இது மிகவும் அக்கறையற்ற மத்திய அரசால், அக்கறையற்ற ஆளும் கட்சி மற்றும் பிரதமரால் உருவாக்கப்பட்டது என்பதை அவை நிரூபிக்கின்றன.

இந்த நிதிக்கான மொத்த பங்களிப்பில் 60 சதவீதம் மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., ஐ.ஓ.சி., போன்ற நிறுவனங்களிலிருந்து வருகிறது. பிரதமர் நிதியின் பி.எம்.கேர்சில் உள்ள 'சி' என்பது வற்புறுத்தல், குழப்பம், ஒழுங்கின்மை மற்றும் ஊழல் ஆகியவற்றைக் குறிக்கிறது.

எந்தவிதமான சட்ட அனுமதியும் இன்றி ஒரு நாட்டின் அரசு இப்படி மிகப்பெரிய அளவில் நிதி திரட்ட முடியுமா? ஆனால் நாட்டின் உயர்ந்த அதிகார மையத்தின் அலுவலகம் எந்தவிதமான சட்ட அனுமதியும் இன்றி ரூ.5 ஆயிரம் கோடி நிதி பெறுகிறது. பொறுப்பு எங்கே? கண்காணிப்பு எங்கே?

தணிக்கை இல்லை

இந்த நிதியில் வெளிப்படைத்தன்மையும் இல்லை. தணிக்கையும் இல்லை.இது சந்தேகத்துக்கு இடமின்றி, அரசியல்சாசன கோட்பாடுகளுக்கு முரணானது. இந்த முழு நிதியும் ரகசியமாக மறைக்கப்படுகிறது.

இந்த நிதிக்கு யார் பணம் தருகிறார்கள் என்பது ஏன் கூறப்படுவதில்லை? யாருக்கு பணம் தரப்படுகிறது என்பதுவும் சொல்லப்படுவதில்லை.

இந்த நிதி தானாகவே முன்வந்து ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். இது தகவல் அறியும் உரிமைச்சட்ட வரம்பின் கீழும் கொண்டு வரப்பட வேண்டும். இதன்மீது தலைமை கணக்கு தணிக்கையர் ஆய்வு நடைபெற வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்....

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 'பி.எம்.கேர்ஸ்' நிதி மீது தலைமை கணக்கு தணிக்கையர் தணிக்கை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

'பி.எம்.கேர்ஸ்' நிதி தொடர்பாக காங்கிரஸ் கட்சி அடிக்கடி கேள்விகள் எழுப்பி, மத்தியஅரசிடம் பதில் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story