விளைநிலங்களில் புகுந்து 4 காட்டு யானைகள் அட்டகாசம்
சிருங்கேரி அருகே விளைநிலங்களில் புகுந்து 4 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினரை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சிக்கமகளூரு:
சிருங்கேரி அருகே விளைநிலங்களில் புகுந்து 4 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினரை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வனவிலங்குகள் அட்டகாசம்
சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா தெங்கினமனே, கலசாபுரா கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்தப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது.
2 கிராமங்களிலும் காட்டு யானைகள் முகாமிட்டு விளைநிலங்களில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு செல்லவே பயத்தில் உள்ளனர்.
4 காட்டு யானைகள்
இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள், அந்த கிராமத்தை சேர்ந்த பரமேசப்பா, ராஜப்பா ஆகியோரின் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்தன. தென்னை மரங்களை பிடுங்கி எறிந்தும், வாழை மரங்களை மிதித்தும், பலாமரங்களில் இருந்து பலாகாய்களை பிடுங்கி எறிந்தும் நாசப்படுத்தின.
மேலும் விளைபயிர்களையும் மிதித்து நாசப்படுத்தி விட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மக்கள் வலியுறுத்தல்
அப்போது அந்தப்பகுதி மக்கள், எங்கள் கிராமத்தில் நிரந்தரமாக காட்டு யானைகள் அட்டகாசம் உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்து வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனை ஏற்று கொண்ட வனத்துறையினர், காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்குவதாகவும் உறுதி அளித்தனர்.