காட்டுயானைகள் அட்டகாசத்தால் பிரசாரம் செய்யாத வேட்பாளர்கள்


காட்டுயானைகள் அட்டகாசத்தால் பிரசாரம் செய்யாத வேட்பாளர்கள்
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காட்டுயானைகளின் அட்டகாசத்தால் சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர்கள் யாரும் பிரசாரம் செய்ய செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டத்தில் உருபகே உள்பட 3 கிராமங்களில் காட்டுயானைகளின் அட்டகாசத்தால் சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர்கள் யாரும் பிரசாரம் செய்ய செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

காட்டுயானைகள் அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடுகெரே தாலுகாவிற்கு உட்பட்டது உருபகே, குந்தூர், உல்மனே ஆகிய கிராமங்கள் ஆகும். இந்த கிராமங்களில் கடந்த 7 நாட்களாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அதாவது ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள், மேற்கண்ட கிராமங்களில் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் பீதியில் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் மேற்கண்ட கிராமங்களில் சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரம் செய்ய வேட்பாளர்கள் யாரும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் உருபகே கிராமத்தில் அர்ஜூன் என்பவரும், குந்தூர் கிராமத்தில் ஷோபா என்ற பெண்ணும் காட்டுயானை தாக்கி இறந்தார்கள். இதன்காரணமாக பீதியில் வேட்பாளர்கள் யாரும் உருபகே உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்ய வரவில்லை என்று கூறப்படுகிறது.

உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்

முன்னதாக இப்பகுதிகளில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த 3 காட்டுயானைகளை அரசு அனுமதியுடன் வனத்துறையினர் பிடித்து வேறு இடங்களில் விட்டனர். இருப்பினும் வேட்பாளர்கள் இங்கு வந்து பிரசாரம் செய்ய தயங்குகிறார்கள். இதுபற்றி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரமேஷ் கூறுகையில், 'உருபகே, குந்தூர், உல்மனே ஆகிய 3 கிராமங்களில் காட்டுயானைகளின் அட்டகாசம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் வேட்பாளர்கள் அங்கு சென்று பிரசாரம் செய்ய தங்குவது உண்மை தான். ஆனால் அதற்காக பிரத்யேக பாதுகாப்பு ஏதும் அவர்களுக்கு கொடுப்பது என்பது கடினம். ஆனால் ஓட்டுப்பதிவு நாளன்று உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வாக்காளர்கள் ஓட்டுப்போட எந்தவித சிரமமும் இல்லாத அளவில் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்' என்று கூறினார்.


Next Story