யாதகிரி மாவட்டத்தை பா.ஜனதா முழுமையாக கைப்பற்றுமா?
வடகர்நாடகத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்தில் இருந்து கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி உருவாக்கப்பட்டது தான் யாதகிரி மாவட்டம். யாதகிரி டவுனை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மாவட்டத்தில் சிமெண்டு தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன.
இதுமட்டுமின்றி இந்த மாவட்டம் கர்நாடகத்தின் பருப்பு கிண்ணம் என்று அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த மாவட்டத்தில் பருப்பு விளைச்சல் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி கரும்பு விளைச்சலும் இருக்கிறது. ஏராளமான சர்க்கரை ஆலைகளும் உள்ளன. அவை தவிர ஜவுளி, தோல் தொழிற்சாலை, ரசாயன தொழிற்சாலைகளும் இங்கு அதிக அளவில் இருக்கின்றன. இதனால் இந்த மாவட்டத்தில் விவசாயிகள், பட்டதாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகிறார்கள்.
இந்த மாவட்டத்தில் சுராப்புரா, சகாப்புரா, குருமித்கல், யாதகிரி என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இங்குள்ள 4 தொகுதிகளில் 3-ல் காங்கிரசும், ஒரு தொகுதியில் கர்நாடக ஜனதா கட்சியும் வெற்றிபெற்று இருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி 2 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்று இருந்தன. அதாவது யாதகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டு சந்தித்த முதல் தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி கண்டு இருந்தது. ஆனால் அதை கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கோட்டைவிட்டு விட்டது. கடந்த முறை 3 கட்சிகளும் சரிவிகித அளவில் வெற்றியை கண்டதாலும், கணிசமாக ஓட்டுகளை அறுவடை செய்ததாலும் இந்த முறையும் இம்மாவட்டத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) மற்றும் ஆளும் பா.ஜனதா ஆகிய 3 கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்த முறை யாதகிரி மாவட்டத்தை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் ஆளும் பா.ஜனதா உள்ளது.
யாதகிரி
யாதகிரி தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த வெங்கடரெட்டி முத்னால் மீண்டும் அக்கட்சி சார்பில் நடைபெற இருக்கும் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சன்னாரெட்டி பட்டீல் துன்னூர் என்பவரும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் அசாருதீன் ராணா என்பவரும் களம் காண்கிறார்கள். ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஏ.சி.கட்லூரு என்பவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இதில் தொடர்ந்து 2-வது வெற்றியை ருசிக்கும் முனைப்பில் வெங்கடரெட்டி முத்னால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சகாப்புரா
சகாப்புரா தொகுதியில் தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரணபசப்பா எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் அமீன் ரெட்டி எலகி போட்டியிடுகிறார். கடந்த 2018-ம் ஆண்டு இந்த தொகுதியில் பா.ஜனதாவைச் சேர்ந்த குருபட்டீல் எம்.எல்.ஏ.வாக இருந்தார். அப்போது நடந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் குருபட்டீல் போட்டியிட்டு சரணபசப்பாவிடம் தோல்வி அடைந்தார். அதனால் இந்த முறை பா.ஜனதா சார்பில் அமீன்ரெட்டி எலகிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமீன்ரெட்டி ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது. ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் இத்தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
குருமித்கல்
குருமித்கல் தொகுதியில் பெரும்பாலும் தொகுதிக்கு வெளியே வசிக்கும் நபர்கள் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளனர். தற்போது இத்தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த நாகனகவுடா எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இத்தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிட்டு, பா.ஜனதா வேட்பாளர் உமேஷ் ஜாதவ் என்பவரிடம் தோல்வி அடைந்தார். இதனால் இந்தமுறை எப்படி இத்தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நடைபெற உள்ள தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் மீண்டும் நாகனகவுடாவே களம் காண்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பாபுராவ் சின்சனசூரும், பா.ஜனதா
சார்பில் லலிதா அனபூர் என்பவரும் போட்டியிடுகிறார்கள்.
சுராப்புரா
சுராப்புரா தொகுதியில் தற்போது பா.ஜனதாவைச் சேர்ந்த நரசிம்ம நாயக் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். எதிர்வரும் தேர்தலிலும் அவரே பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ராஜா வெங்கடப்பா நாயக் களம் காண்கிறார். ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ராஜா கிருஷ்ணப்பா நாயக் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறார். அவர் ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 3-ம் இடம் பிடித்து தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் கடந்த தேர்தலில் 2 தொகுதிகளை கைப்பற்றி இருந்ததாலும், நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று இருந்ததாலும் யாதகிரி மாவட்டத்தை முழுமையாக கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜனதா இருந்து வருகிறது. இதனால் அக்கட்சி வேட்பாளர்களும், தொண்டர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினரும் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளனர். இதனால் யாதகிரி மாவட்ட தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தொகுதி வெற்றி தோல்வி
சுராப்புரா நரசிம்ம நாயக்(பா.ஜனதா) -1,04,426 ராஜாவெங்கடப்பா நாயக்(காங்.) -81,858
சகாப்புரா சரணபசப்பா(காங்.) -76,642 குருபட்டீல்(பா.ஜனதா) -47,668
யாதகிரி வெங்கடரெட்டி முத்னால்(பா.ஜனதா) -62,227 மாலகரெட்டி(காங்.) -49,346
குருமித்கல் நாகனகவுடா(ஜனதா தளம்-எஸ்) -79,627 பாபுராவ் சின்சனசூர்(காங்.) -55,147
கடந்த தேர்தலில் வெற்றி-தோல்வி நிலவரம்