தேர்தலை ஒற்றுமையாக சந்திக்க மும்பை கூட்டத்தில் தீர்மானம்: தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க திட்டம்


தேர்தலை ஒற்றுமையாக சந்திக்க மும்பை கூட்டத்தில் தீர்மானம்: தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க திட்டம்
x
தினத்தந்தி 2 Sep 2023 12:15 AM GMT (Updated: 2 Sep 2023 12:15 AM GMT)

மும்பையில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் தேர்தலை ஒற்றுமையாக சந்திக்க தீர்மானிக்கப் பட்டது. மேலும் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் அமைக்கப் பட்டது.

மும்பை, செப்.2-

அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா கூட்டணி 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன.

எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ந் தேதியும், 2-வது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஜூலை 17, 18-ந் தேதிகளிலும் நடந்தது.

பெங்களூருவில் நடந்த கூட்டத்தின் போது எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது. முதல் இரண்டு கூட்டங்களும் எதிர்க்கட்சிகள் அணி திரட்டி பலத்தை காட்டும் அளவில் இருந்தன.

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முக்கிய முடிவுகளை எடுக்கும் நோக்கில் மராட்டிய மாநில தலைநகர் மும்பையில்இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மும்பையில் உள்ள 'கிராண்ட் ஹயாத்' ஓட்டலில் 2 நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்பட 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தலைவர்களுக்கு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் நாள் இரவில் விருந்து அளித்தார்.

இந்தநிலையில் நேற்று மும்பையில் 2-வது நாளாக ஆலோசனை கூட்டம் நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 2 மணி வரை நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். பா.ஜனதாவை வீழ்த்த தேர்தலை ஒற்றுமையாக சந்திக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த கூட்டத்தில் முக்கிய முடிவாக 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு மற்றும் தேர்தல் வியூக குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் இடம்பெற்ற தலைவர்கள் விவரம் வருமாறு:-

சரத்பவார்

கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க), பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் (ராஷ்டிரீய ஜனதாதளம்), அபிஷேக் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), சஞ்சய் ராவத் (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா), ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), ராகவ் சதா (ஆம் ஆத்மி), ஜாவேத் அலிகான் (சமாஜ்வாடி), லாலன் சிங் (ஐக்கிய ஜனதாதளம்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குழுவில் இடம்பெறும் தலைவரின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஒருங்கிணைப்பு குழு தான் கூட்டணி தொடர்பான அடுத்தடுத்த முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. குறிப்பாக தொகுதி பங்கீடு தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பு குழு மேற்கொள்ளும் என்றும், இந்த பணியை வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்க இருப்பதாகவும் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல பிரசார குழு, பத்திரிகையாளர்கள் குழு, சமூக ஊடக குழு, ஆய்வு குழு ஆகிய குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

இருப்பினும் இந்தியா கூட்டணியின் அமைப்பாளர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இதேபோல கூட்டணியின் இலச்சினையும் (லோகோ) வெளியிடப்படவில்லை. நேற்று காலை இலச்சினை வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில், இதற்கு கட்சியின் பல தலைவர்கள் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் சின்னங்கள் இருக்கும்போது, இலச்சினை வெளியிட்டால் மக்களிடம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்ததால், இந்த திட்டம் தள்ளிப்போடப்பட்டு உள்ளது.

முன்னதாக இந்தியா கூட்டணி கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:-

* இந்தியா கூட்டணி கட்சிகளான நாங்கள் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் முடிந்தவரை ஒன்றாக போட்டியிட முடிவு செய்கிறோம். பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு ஏற்பாடுகள் உடனடியாக தொடங்கப்படும். கொடுக்கல், வாங்கல் முறையில் இது குறித்து முடிவு எடுக்கப்படும்.

* நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி விரைவில் பொது கூட்டங்கள் நடத்துவோம்.

* இந்தியா கூட்டணி கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் உள்ள தகவல் தொடர்பு மற்றும் ஊடக உத்திகள் மூலம் பல்வேறு மொழிகளில் "இந்தியா ஒன்றுபடும், இந்தியா வெற்றி பெறும்" என்ற கருப்பொருளுடன் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

* இந்தியா கூட்டணி கட்சிகளான நாங்கள் நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் நமது நாட்டை பெருமைப்படுத்திய சிறந்த சாதனைகளுக்காக இஸ்ரோ குடும்பத்தை வாழ்த்துகிறோம். இஸ்ரோவின் திறமை மற்றும் திறன்களை உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும் 60 ஆண்டு கள் ஆனது.

* சந்திரயான்-3 திட்டம் உலகை சிலிர்க்க வைத்துள்ளது. மேலும் சனிக்கிழமையன்று சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா- எல்1 ஏவப்படுவது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரோவில் அசாதாரண சாதனைகள் நமது சமூகத்தில் அறிவியல் மனப்பான்மையை வலுப்படுத்துவதோடு நமது இளைஞர்கள் அறிவியல் முயற்சியில் சிறந்து விளங்குவதற்கான உத்வேகத்தை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.


Next Story