ஒரே பாலின ஜோடி திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்குமா? - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை


ஒரே பாலின ஜோடி திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்குமா? - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
x

ஒரே பாலின ஜோடி திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரும் வழக்குகளின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு முன் தொடங்கியது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணத்துக்கு சட்டப்படியான அங்கீகாரம் இல்லை. இதனால் ஒரு ஆண் மற்றொரு ஆணையோ, ஒரு பெண் மற்றொரு பெண்ணையோ திருமணம் செய்து கொண்டால் சட்டப்படி அங்கீகாரம் பெற முடியாது, இதுதான் தற்போதைய நிலை.

ஆனால், ஆண் ஜோடிகளான ஐதராபாத்தைச் சேர்ந்த சுப்ரியோ சக்கரவர்த்தி-அபய் தங், டெல்லியைச் சேர்ந்த பார்த் பெரோஸ் மெஹரோத்ரா-உதய்ராஜ் ஆனந்த் ஆகியோர் தங்கள் திருமணத்துக்கு 1954-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறப்பு திருமண சட்டத்தின்படி சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளைத் தொடுத்துள்ளனர்.

மத்திய அரசு பதில் மனு

சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வந்தன. இதில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி மத்திய அரசு கடந்த மாதம் தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், ஒரே பாலின ஜோடிகள் திருமணம் செய்வதற்கு அங்கீகாரம் அளிப்பதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, "நமது நாட்டின் சட்டங்கள்படி, ஒரு பாலின ஜோடிகள் தங்கள் திருமணத்தை அடிப்படை உரிமை என்று கூற முடியாது; ஒரே பாலின ஜோடிகளின் திருமணம் அங்கீகரிக்கப்படவும் இல்லை. ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை. மனித உறவுகளில் அங்கீகாரம் வழங்குவதும், உரிமைகளை வழங்குவதும், சட்டம் இயற்றுவோரின் செயல்பாடு ஆகும். அது ஒருபோதும் நீதித்துறை தீர்ப்பின் பொருளாக இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே இந்த வழக்கு, முற்றிலும் நிலைத்து நிற்க முடியாதது, ஏற்றுக்கொள்ள முடியாதது. திருமண சட்டங்களை நாடாளுமன்றம் வடிவமைத்து இயற்றி இருக்கிறது. இவற்றை தனிப்பட்ட சட்டங்களும், பல்வேறு மத சமூகத்தின் சட்டங்களும் நிர்வகிக்கின்றன. இவை ஒரு ஆணும், பெண்ணும் திருமணத்தில் இணைவதற்குத்தான் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கின்றன" என கூறப்பட்டுள்ளது.

அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

இதையடுத்து கடந்த மாதம் 13-ந் தேதி இந்த வழக்குகள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது, இது முக்கியமான பிரச்சினை என கூறியதுடன், 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த 5 நீதிபதிகள் அமர்வில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பட், ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நேற்று முன்தினம் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தவையா என்று மத்திய அரசு எழுப்பி உள்ள கேள்வி குறித்து முதலில் விசாரிக்க ஒப்புக்கொண்டனர்.

விசாரணை தொடங்கியது

இந்த நிலையில், நேற்று இவ்வழக்குகளின் விசாரணை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் முன் தொடங்யது.

அப்போது நீதிபதிகள், "உங்கள் பிறப்புறுப்பு என்ன என்பதல்ல கேள்வி. இது மிகவும் சிக்கலான பிரச்சினை. எனவே சிறப்பு திருமண சட்டம் ஆணும், பெண்ணும் என்று கூறினாலும், ஆணும், பெண்ணும் என்ற கருத்தே பிறப்புறுப்பு அடிப்படையில் முழுமையானது அல்ல" என கருத்து தெரிவித்தனர்.

மத்திய அரசு வாதம்

தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அவர் கூறியதாவது:-

வாழ்க்கை துணைவரை தேர்வு செய்யும் உரிமை, அந்தரங்க உரிமை என பல்வேறு உரிமைகள் உள்ளன.

இருந்தாலும், திருமணத்தின் சமூக சட்ட அந்தஸ்தை கோர்ட்டு முடிவுகள் மூலம் வழங்கி விட முடியாது. நாடாளுமன்றத்தினால்கூட வழங்கி விட முடியாது. அதற்கான ஏற்பு, சமூகத்தில் இருந்து வர வேண்டும்.

ஆனால் இந்துவாக இருக்கும் ஒருவர், இந்துவாக இருந்துகொண்டு, தனது பாலினத்தில் திருமணம் செய்துகொள்ளும் உரிமையைப் பெற விரும்பினால் பிரச்சினை எழும் என்று அவர் கூறினார்.

'கட்டாயப்படுத்த முடியாது'

உடனே நீதிபதிகள், "நாங்கள் தனிப்பட்ட சட்டத்திற்குள் செல்லப்போவதில்லை. ஆனால் நாங்கள் அவற்றுக்குள் செல்ல வேண்டும் என்று இப்போது நீங்கள் விரும்புகிறீர்கள். ஏன்? அதைத் தீர்மானிக்குமாறு நீங்கள் எவ்வாறு எங்களைக் கூற முடியும்? நாங்கள் எல்லோரது தரப்புகளையும் கேட்க வேண்டும் என்று நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது" என கூறினர்.

அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "பின்னர் இது பிரச்சினையை குறுகியதாக்கி விடும்" என கூறினார். அதற்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "நாங்கள் ஒரு நடுத்தர போக்கை எடுத்துக்கொள்கிறோம். எதையாவது தீர்மானிப்பதற்கு, நாம் எல்லாவற்றையும் தீர்மானிக்க வேண்டியதில்லை" என கூறினார்.

'கோர்ட்டு தீர்மானிக்க வேண்டும்'

தொடர்ந்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்த வழக்கில் எழுந்துள்ள கேள்விகளுக்குள் கோர்ட்டு செல்லலாமா அல்லது அவற்றுக்குள் நாடாளுமன்றம் செல்ல வேண்டுமா? என்பதை கோர்ட்டு தீர்மானிக்க வேண்டும்" என்று கூறினார்.

தொடர்ந்து மூத்த வக்கீல்கள் ராகஷே் திவிவேதி, கபில் சிபல், முகுல் ரோத்தகி உள்ளிட்டோர் வாதிட்டனர்.

மூத்த வக்கீல் மேனகா குருசாமி வாதிடும்போது, "ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்டவர்கள் வங்கி கணக்கு தொடங்கவும், காப்பீடு எடுத்துக்கொள்ளவும் முயற்சிக்கிறபோது இந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன" என குறிப்பிட்டார்.

தொடர்ந்து வாதம் நடந்தது.


Next Story