பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - மத்திய அரசு


பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார் - மத்திய அரசு
x

பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி,

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுதினம் (பிப்.1) மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, ராகுல்காந்தியின் யாத்திரை மீதான தாக்குதல், ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரஹலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., சிவசேனா, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் உள்பட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தரும்படி, மத்திய அரசு தரப்பில் எதிர்கட்சிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story