ராஜஸ்தான்: மாநிலங்களவை தேர்தலையொட்டி மீண்டும் ஓட்டல்களில் தங்க வைக்கப்படும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!


ராஜஸ்தான்: மாநிலங்களவை தேர்தலையொட்டி மீண்டும் ஓட்டல்களில் தங்க வைக்கப்படும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!
x

பாஜக அவர்களுக்கு சாதகமாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை மனம் மாற்றிவிடுமோ என பயந்து தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டுக்கு மாற்ற அக்கட்சி முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலங்களவை தேர்தலை பொறுத்தவரை எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை பொறுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் ராஜ்யசபா சீட்களின் எண்ணிக்கை மாறுபடும்.

ராஜஸ்தானில் உள்ள நான்கு மாநிலங்களவை சீட்களுக்கு ஜூன் 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு காங்கிரஸ் மூன்று வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும்கட்சியாக உள்ள காங்கிரசுக்கு 108 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மற்றவர்கள் ஆதரவுடன் மொத்தம் 126 பேர் சவுகரியமான நிலையில் காங்கிரஸ் உள்ளது. ஆனால் இப்போது எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை கூடவில்லை. காங்கிரஸ் சார்பில் களம்காணும், மூன்றாவது வேட்பாளரான பிரமோத் திவாரி வெற்றி பெறுவதற்கு கூடுதலாக 15 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் தேவைப்படுகிறது.

இந்நிலையில், பாஜக அவர்களுக்கு சாதகமாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை மனம் மாற்றிவிடுமோ என பயந்து தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை உதய்பூருக்கு மாற்ற அக்கட்சி முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து, ராஜ்யசபா தேர்தலை முன்னிட்டு 40 ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் சில சுயேச்சைகள் உதய்பூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு இன்று புறப்பட்டனர். ராஜஸ்தானில் முதல்-மந்திரி இல்லத்தில் இருந்து,எம்.எல்.ஏக்கள் சொகுசு பேருந்தில் ஏறி மாலை 5 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் உதய்பூருக்கு புறப்பட்டனர்.

அதேபோல, எம்.எல்.ஏக்களை காக்க காங்கிரஸ் ஆளும்கட்சியாக உள்ள அரியானாவிலும் எம்.எல்.ஏக்களை அக்கட்சி சத்தீஸ்கருக்கு அனுப்பியுள்ளது. அரியானா எம்.எல்.ஏ.க்கள் விமானம் மூலம் காங்கிரஸ் ஆளும்கட்சியாக உள்ள சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்குள்ள ஓட்டலில், ராஜ்யசபா தேர்தலுக்கு எவ்வாறு சரியாக வாக்களிக்க வேண்டும் என்பது எம்.எல்.ஏக்களுக்கு கற்பிக்கப்படும். ராஜ்யசபா தேர்தலில் ஒரு புள்ளி, கோடு அல்லது மையின் நிறம் சரியாக இல்லாவிட்டாலும், அது வாக்களிப்பை ரத்து செய்ய வழிவகுக்கும் என்பதால், சரியான முறையில் வாக்களிக்க எம்எல்ஏக்களுக்கு கற்பிக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story