'தகவல் தொழில்நுட்ப வரைவு விதிமுறைகளில் புதிய திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும்' - காங்கிரஸ் வலியுறுத்தல்


தகவல் தொழில்நுட்ப வரைவு விதிமுறைகளில் புதிய திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
x

பொய் செய்தியை தீர்மானிக்க மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையத்துக்கு அதிகாரம் அளிப்பதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தகவல் தொழில்நுட்ப வரைவு விதிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. அதுகுறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டு இருந்தது. இதற்கிடையே, நேற்று முன்தினம் அந்த வரைவு விதிமுறைகளில் ஒரு திருத்தத்தை சேர்த்தது.

அதன்படி, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் மையத்தின் (பி.ஐ.பி.) உண்மை கண்டறியும் பிரிவோ அல்லது மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற இதர அமைப்போ 'பொய்' என அடையாளம் காணும் தகவல்களை சமூக வலைத்தள நிறுவனங்கள், தங்களது சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இத்திருத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"முன்எப்போதும் இல்லாதவகையில், மோடி அரசு பெரிய அண்ணன் மனப்பான்மையில் தன்னைத்தானே நீதிபதியாக முடிசூட்டிக் கொண்டுள்ளது. இந்த புதிய திருத்தம், மோடி அரசின் கவுரவத்தை கட்டமைக்க உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் செய்திகளை மோடி அரசு சரிபார்த்தால், மோடி அரசை யார் சரிபார்ப்பது?

பத்திரிகை தகவல் மையம் மூலமாக இணையதளத்தை நசுக்குவதும், ஆன்லைன் செய்திகளை தணிக்கை செய்வதும்தான் 'உண்மை கண்டறிதல்' என்பதற்கு மோடி அரசு கண்ட அர்த்தம் போலும்.

மோடி அரசின் கவுரவத்துக்கு ஏற்றதாக இல்லாத அனைத்து செய்திகளும் நீக்கப்பட வாய்ப்புள்ளது. பத்திரிகைகளை நசுக்குவது மோடி அரசுக்கு புதிதல்ல. இப்போது, சமூக வலைத்தளங்களில் கருத்து சுதந்திரம் மீது ரகசிய தாக்குதல் நடத்துகிறது. இது, இழிவான தணிக்கை முறை.

ஆகவே, இந்த புதிய திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இந்த விதிமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story