மகனை கொன்ற வழக்கில் கைதான பெண் சிறையில் அடைப்பு: கணவரிடம் போலீஸ் விசாரணை
சுசானா சேத்தை மீண்டும் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுசனா சேத்(வயது 39). தொழில் அதிபர். இவரது கணவர் வெங்கட்ராமன். என்ஜினீயரான இவர் இந்தோனேசியாவில் வேலை பார்த்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழும் நிலையில், இவர்களது 4 வயது மகன் சின்மயை சுசனா சேத் கோவாவுக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்தார்.
மகனை கொலை செய்த பின்னர் அவனது உடலை சூட்கேசில் வைத்துக் கொண்டு பெங்களூருவுக்கு கோவாவில் இருந்து வாடகை காரில் புறப்பட்டு வந்தபோது சுசனா சேத் போலீசில் பிடிபட்டார்.
அவரை போலீசார் 6 நாள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே சுசனா சேத்தின் கைப்பையில் இருந்து கிழிந்த துண்டு, துண்டாக கசங்கிய நிலையில் கிடந்த ஒரு டிஸ்யூ காகிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த டிஸ்யூ காகிதத்தில் சுசனா சேத் ஐலேனர்(கண் மை) கொண்டு தனது மகனை தன்னுடைய கணவர் சந்திக்க கோர்ட்டு அனுமதி அளித்தது பிடிக்கவில்லை என ஆங்கிலத்தில் எழுதி இருந்ததாக தெரிவித்தனர். அதையடுத்து அந்த டிஸ்யூ பேப்பர் கடிதத்தை போலீசார் சீல் வைத்து தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த ஆய்வு அறிக்கையில், சுசனா சேத் தான் அந்த கடிதத்தை எழுதியது உறுதியாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில் நேற்று மாலையுடன் சுசனா சேத்தின் 6 நாள் போலீஸ் காவல் முடிவடைந்தது. அதையடுத்து போலீசார் கோவாவில் உள்ள மாபுசா கோர்ட்டில் சுசனா சேத்தை ஆஜர்படுத்தினர்.
அதையடுத்து அவரை நீதிமன்ற காவலில் கோவாவில் உள்ள சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் சுசனா சேத்தை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மீண்டும் அவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சுசனா சேத்தின் கணவர் வெங்கட்ராமன், நேற்று கோவாவில் உள்ள கலங்குட்டே போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் போலீசார் சுசனா சேத் குறித்தும், அவர்களது குடும்ப வாழ்க்கை குறித்தும் கேட்டு தகவல்களை பெற்றனர்.
மதியம் வரை அவரிடம் போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றனர். பின்னர் மதிய உணவு சாப்பிட சென்ற வெங்கட்ராமன், அதன்பிறகும் போலீஸ் நிலையத்துக்கு வந்து போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். ஆனால் மதியம் சிறிது நேரம் மட்டும் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் போலீஸ் நிலையத்துக்கு வரும்போதும், பின்னர் அங்கிருந்து போகும்போதும் நிருபர்களுக்கு பேட்டி அளிக்க மறுத்துவிட்டார்.
போலீசாரிடம் அவர் விரிவான வாக்குமூலம் அளித்திருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் அதுபற்றிய தகவலை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். போலீசாரிடம் வெங்கட்ராமன், 'எனக்கும் எனது மனைவி சுசனா சேத்துக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு பெங்களூரு குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது. எனது மகனை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று சந்திக்க கோர்ட்டு அனுமதி அளித்து இருந்தது. ஆனால் அதற்கு எனது மனைவி சுசனா சேத் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
மேலும் கடந்த 5 வாரங்களாக அவர் எனது மகனை சந்திக்க அனுமதிக்கவில்லை. எனது மகன் கொலை செய்யப்பட்டபோது நான் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் இருந்தேன்' என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.