பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சோனாகாச்சி பகுதிக்கு 2 முறை... சஞ்சய் ராய் பற்றி போலீசார் அதிர்ச்சி தகவல்
பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் சஞ்சய் ராய்க்கும், அனூப்புக்கும் உள்ள நெருங்கிய தொடர்பால், மருத்துவமனையின் அனைத்து பகுதிகளுக்கும் சஞ்சய் தடையின்றி சென்று வந்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். 23-ந்தேதி வரை அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். வழக்கு விசாரணை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று இரவில், சஞ்சய் ராய் சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள 2 இடங்களுக்கு சென்று வந்தது தெரிய வந்துள்ளது. இதுபற்றி கொல்கத்தா போலீசார் கூறும்போது, சம்பவம் நடப்பதற்கு முன்பு இரவில் சோனாகாச்சி பகுதிக்கு (சிவப்பு விளக்கு) சஞ்சய் ராய் சென்றிருக்கிறார்.
இதன்பின்னர், நன்றாக குடித்து விட்டு, அடுத்தடுத்து பாலியல் தொழில் நடைபெறும் 2 இடங்களுக்கு சென்றுள்ளார் என தெரிவித்தனர். இதன்பின்பு, அந்த நாளின் நள்ளிரவில் மருத்துவமனைக்கு அவர் சென்றார். அவர், பயிற்சி பெண் டாக்டர் தங்கியிருந்த கருத்தரங்கு அறைக்குள் சென்று, திரும்பிய காட்சிகள் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது. இதனை அடிப்படையாக கொண்டு அவர் கைது செய்யப்பட்டார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நகர காவல் துறை நல வாரியத்தின் உறுப்பினராக உள்ள உதவி காவல் ஆய்வாளர் அனூப் தத்தாவிடம் 2-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது.
சஞ்சய் ராய்க்கும், அனூப்புக்கும் உள்ள நெருங்கிய தொடர்பால், ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் மருத்துவமனையின் அனைத்து பகுதிகளுக்கும் சஞ்சய் தடையின்றி சென்று வர முடிந்துள்ளது.
அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் சி.பி.ஐ.க்கு கிடைத்திருக்கின்றன. இதனால், இந்த விவகாரத்தில் அனூப்புக்கும், சஞ்சய்க்கும் உள்ள தொடர்பு பற்றிய பிற விவரங்களை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.