திருமணம் செய்து கொள்வதாக கூறி முதியவரிடம் பணம் பறித்த பெண்

திருமணம் செய்து கொள்வதாக கூறி முதியவரிடம் பணம் பறித்த கொல்லம் அஞ்சலைச் சேர்ந்த அஸ்வதி அச்சு (39) என்பவரை பூவார் போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் பூவார் காஞ்சிரம்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முருகன் (68) மனைவி இறந்த பிறகு, மாற்றுத்திறனாளி மகனைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து சில தரகர்களை சந்தித்தார்.
அப்போது அஸ்வதி அச்சு (39) பழக்கமாகி உள்ளார். அஸ்வதி தனக்கு ரூ. 40 ஆயிரம் கடன் இருக்கிறது. அதை தருவதென்றால் முருகனை திருமணம் செய்து கொள்ள பெண் ஒருவர் தயாராக இருப்பதாகவும் கூறி உள்ளார்.
இதை நம்பிய முருகன் முதலில் 25000 ரூபாய் கொடுத்தார். சப்-ரிஜிஸ்தரார் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய பூவாரு வந்தபோது மீண்டும் ரூ.15 ஆயிரம் கொடுத்தார். ஆனால் அன்றைய தினம் நெட் இணைப்பு இல்லாததால் பதிவு நடைபெறவில்லை.
அஸ்வதியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது, பணம் கிடைக்கவில்லை என அஸ்வதி மறுத்து உள்ளார்.
இதை தொடர்ந்து முருகன் பூவார் போலீசில் புகார் அளித்தார்.இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அஸ்வதி அச்சு, அனுஸ்ரீ அனு என்ற பெயரில் சமூக வலைதளங்களில் போலி சுயவிவரங்களை உருவாக்கி ஏமாற்றி வந்துள்ளார். சமூக வலைதளங்களில் இருந்து எடுக்கபட்ட இளம்பெண்களின் புகைப்படங்களை இதற்கு பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்து உள்ளது. அஸ்வதியின் ஹனி டிராப்பில் போலீசார் உட்பட பலர் சிக்கினர். அஸ்வதி பெயரில் பல வழக்குகள் உள்ளன.