சீனாவை ஒட்டிய எல்லை பகுதியில் போர் விமானங்களில் பறந்த பெண் விமானிகள்


சீனாவை ஒட்டிய எல்லை பகுதியில் போர் விமானங்களில் பறந்த பெண் விமானிகள்
x

சீனாவை ஒட்டிய அசல் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பெண் விமானிகள் பறந்து சென்றனர்.

புதுடெல்லி,


இந்திய விமான படையில் போர் பிரிவில் முதன்முறையாக பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி அவ்னி சதுர்வேதி, பாவனா காந்த் ஆகியோர் பணியமர்த்தப்பட்டனர். இதன்பின்னர், மிக்-21 ரக விமானத்தில் தனியாளாக முதன்முறையாக பாவனா காந்த் பறந்து சென்றார். அதனை தொடர்ந்து ரபேல் போர் விமானங்களில் சிவாங்கி சிங் பெண் விமானியாக பறந்து சென்றார்.

இந்திய விமான படையில் பெண் விமானிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அருணாசல பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட கிழக்கு பிரிவில் பெண் விமானிகள் போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் பறந்து சென்று வருகின்றனர்.

இந்திய விமான படையில், வான் மற்றும் தரை பிரிவு பணிகளில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையை அக்னிவீர் திட்டத்தின் கீழ் அதிகரிக்க அரசு திட்டமிட்டு உள்ளது.

இதேபோன்று உள்நாட்டிலேயே உருவான ஏ.எல்.எச். துருவ் மார்க் 3 ஹெலிகாப்டர்களில், இந்திய பெண் விமானிகளான ஆனி அவஸ்தி மற்றும் ஏ. நாயின் ஆகியோர் அருணாசல பிரதேச பிரிவில் அடர்ந்த வனம் மீது, வடகிழக்கே சீனாவை ஒட்டிய அசல் எல்லை கட்டுப்பாட்டு பகுதியையொட்டி பறந்து சென்றனர்.

இந்திய விமான படையின் சுகோய் ரக போர் விமானத்தின் ஆயுத தாக்குதல் பிரிவில் பெண் விமானியாக பணியாற்றும் உயரதிகாரியான லெப்டினன்ட் தேஜஸ்வி கூறும்போது, பல திறமை வாய்ந்த பெண்கள் முன்பே தடைகளை உடைத்து எங்களுக்கு வழி ஏற்படுத்தி உள்ளனர். அந்த வழியில் நாட்டுக்கு சேவையாற்றும் எங்களது கனவை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.

போர் வீராங்கனைகளாக அவர்கள் ஒரு சிறந்த பணியை மேற்கொள்வதுடன், தங்களுக்கு கட்டளையிட்ட பணிகளை நிறைவேற்ற இயந்திரங்களை நன்றாக கையாளுகின்றனர் என்று கிழக்கு மண்டல அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதுபற்றி இந்திய விமான படையின் கிழக்கு மண்டல அதிகாரிகள் கூறும்போது, பெண் விமானிகள் மற்றும் தரைப்பகுதியில் பணியாற்றும் விமான பெண் ஊழியர்கள் நாடு முழுவதும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

அவர்கள், உலகின் மிக உயரம் வாய்ந்த போர்க்களம் என கூறப்படும் சியாச்சின் பனிமலை பிரிவில் இருந்து கிழக்கே உள்ளடங்கிய அருணாசல பிரதேசத்தின் விஜய்நகர் பகுதி வரை அனைத்து வகையான நிலப்பரப்பிலும் செயல்படுவார்கள். படைகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கு ஆதரவான பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று கூறியுள்ளனர்.


Next Story