5 மாநில தேர்தலில் வெற்றிபெற ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்- காங்கிரஸ் தலைவர் கார்கே


5 மாநில தேர்தலில் வெற்றிபெற ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்- காங்கிரஸ் தலைவர் கார்கே
x

5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற தொண்டர்கள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். அதற்கு உறுதியான வியூகத்தை பின்பற்றுவது அவசியம் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே கூறினார்.

சோனியா, ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியில் கொள்கை முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான காரிய கமிட்டி சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த மாதம் 16-ந் தேதி, ஐதராபாத்தில் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 5 மாநில சட்டசபை தேர்தலை சந்திப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு

கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் கார்கே பேசினார். அவர் பேசியதாவது:-

சமூக நீதியை உறுதி செய்ய நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மக்கள்தொகைக்கு ஏற்ப உரிமைகளை வழங்குவதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். ஆனால், பா.ஜனதா இந்த விஷயத்தில் மவுனம் சாதிக்கிறது. நலத்திட்டங்களில் உரிய பங்கை பெற நலிந்த பிரிவினரின் நிலைமை குறித்த சமூக-பொருளாதார புள்ளிவிவரங்கள் வைத்திருப்பது முக்கியம். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும்.

மோடி பொய் பிரசாரம்

மத்திய அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தும் முயற்சிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும். அவர்களின் பொய் பிரசாரங்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்க வேண்டும். பிரதமர் மோடி, மணிப்பூர் மாநிலத்துக்கு இன்னும் செல்லவில்லை. ஆனால், சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களுக்கு அடிக்கடி செல்கிறார். அவர் காங்கிரஸ் பற்றி பொய் பிரசாரம் செய்கிறார். தேர்தல் நெருங்க நெருங்க இந்த தாக்குதல் அதிகரிக்கும். அந்த பொய் பிரசாரங்களை முறியடித்து, நாம் உண்மையை விளக்க வேண்டும்.

முழு பலம்

5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற உறுதியான வியூகம் அவசியம். கட்சியினர் முழு ஒருங்கிணைப்புடனும், ஒழுக்கத்துடனும், ஒற்றுமையுடனும் பணியாற்ற வேண்டும். நமது முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டும். கர்நாடகா, இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியால் தொண்டர்களிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. பணவீக்கம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை நாடு சந்தித்து வருகிறது. பா.ஜனதாவின் பிரிவினை தந்திரங்கள், ஜனநாயக நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

சவால்கள்

2024-ம் ஆண்டு, இந்த சவால்களை எதிர்கொள்ளக்கூடிய மத்திய அரசை உருவாக்க நாம் பாடுபட வேண்டும். நலிந்த பிரிவினர், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோரின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். பணவீக்கம், வேலையின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளின் சாதனைகளை நாம் விளம்பரப்படுத்த வேண்டும். அதன்மூலம் மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கி, ஒளிமயமான எதிர்காலத்துக்கு பாதை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சோனியாகாந்தி

காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியாகாந்தி பேசியதாவது:-

நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை நான் 100 சதவீதம் ஆதரிக்கிறேன். இதற்கு காங்கிரஸ் கட்சி உயர் முன்னுரிமை அளிக்கிறது. இதை உறுதியாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story