பெங்களூரு அருகே குடும்ப பிரச்சினையில் மனைவியை கொன்று, தொழிலாளி தற்கொலை
பெங்களூரு அருகே குடும்ப பிரச்சினையில் மனைவியை கொன்று, தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மைலசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், தொழிலாளி. இவரது மனைவி லட்சுமிதேவி. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதன்படி, சம்பவத்தன்றும் சுரேசுக்கும், லட்சுமிதேவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ் தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில், பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்து விட்டார்.
இந்த நிலையில், மனைவியை கொலை செய்த சுரேசும் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் பன்னரகட்டா போலீசாா் விரைந்து சென்று தம்பதியின் உடல்களை கைப்பற்றி விசாாித்தனர். குடும்ப பிரச்சினையில் மனைவியை கொன்றுவிட்டு சுரேஷ் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.