உலகக்கோப்பை கிரிக்கெட்; அரையிறுதியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நாடு முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில், பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுடெல்லி,
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதியில், முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது.
அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இந்தியா பெற்ற வெற்றியால், நாடு முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில், பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து கொண்டார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய அணிக்கு வாழ்த்துகள். உயர்ந்த செயல்திறனை வெளிப்படுத்தி, குறிப்பிடத்தக்க பாணியில் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
அற்புத பேட்டிங், சிறந்த பந்துவீச்சு ஆகியவற்றால், போட்டியில் நமது அணிக்கு வெற்றி கிட்டியது. இறுதி போட்டியில் சிறந்த முறையில் விளையாட வாழ்த்துகள் என குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோன்று, போட்டியில் சிறந்த முறையில் பந்துவீசிய முகமது ஷமிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட அவர், பல தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களாலும் ஷமியின் பந்து வீச்சானது கொண்டாடப்படும் என தெரிவித்து உள்ளார்.